வால்பாறையில் தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு


வால்பாறையில் தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2021 8:55 PM IST (Updated: 9 Dec 2021 8:55 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு

வால்பாறை

வால்பாறையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. 

காட்டு யானைகள் நடமாட்டம்

வால்பாறையில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கேரள வனப்பகுதிகளிலிருந்து அதிகளவிலான காட்டு யானைகள் கூட்டம் வால்பாறை வனப்பகுதிகளுக்கு வந்துள்ளது. இதனால் தமிழக- கேரள எல்லை பகுதியில் உள்ள முடீஸ் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் அதிகப்படியான சேதங்கள் ஏற்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ஹைபாரஸ்ட், முடீஸ், முக்கோட்டுமுடி ஆகிய இடங்களில் வீடுகள், ரேஷன் கடைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. குறிப்பாக முக்கோட்டுமுடி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்திருந்த மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையை காட்டுயானைகள் உடைத்து ரேஷன் அரிசிகளை தின்றது.


தேயிலை பறிக்கும் பணி

காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைக்கும் போது ரேஷன் கடைக்கு அருகில் உள்ள தொழிலாளர்கள் தங்களது வீடுகளையும் யானைகள் உடைத்து விடும் என்ற அச்சத்தோடு வீடுகளை விட்டு வெளியே ஓடவேண்டிய நிலை ஏற்படுகிறது. வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் அங்கு புகுந்து அட்டகாசம் செய்கிறது. மேலும் அந்த காட்டு யானை கூட்டம் வனத்துறையினரையும் துரத்துகிறது.
 இதனால் தொழிலாளர்கள் மத்தியில் அச்சமும் பீதியும் நிலவி வருகிறது. எனவே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் ரேஷன் கடைகளை மாற்றி ரேஷன் கடைக்கென தனியாக பாதுப்பாக தரமான கட்டிடங்களை கட்டித்தருவதற்கு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் அந்தந்த எஸ்டேட் பகுதிகளுக்கு வாகனங்களில் ரேஷன் பொருட்களை கொண்டு வந்து விநியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். இரவில் ரேஷன் கடைகளை உடைத்த யானைகள் பகலில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு நின்று வருவதால் தேயிலை இலை பறிக்கும் பணி பாதிக்கப்படுகிறது. 

ஆபத்தை உணராமல் செல்பி

குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த பலர் ஆபத்தை உணராமல் யானைகளுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வால்பாறை முடீஸ் பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. 
இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதி வாலிபர்கள் சிலர் ஆபத்தை உணராமல் காட்டு யானைகளின் அருகில் சென்று புகைப்படம், செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் அதுபோன்ற செய்லகளில் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.

Next Story