தினதந்தி புகார் பெட்டி


தினதந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Dec 2021 11:27 PM IST (Updated: 9 Dec 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

தினதந்தி புகார் பெட்டி


தெருநாய்கள் தொல்லை

கோவை மாநகரில் உக்கடம், அரசு கலைக் கல்லூரி சாலை, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரிகின்றன. அவை, இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண் கோவை 

போக்குவரத்து நெருக்கடி

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள உழவர் சந்தை ரோட்டில் 2 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மாலை நேரங்களில் மதுபாட்டில் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. மதுபிரியர்கள் வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் சிலர் ரோட்டோரத்தில் நின்று மது அருந்துவதால் பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே நகரில் போக்குவரத்து மிகுந்த சாலையில் உள்ள மதுக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண்குமார், பொள்ளாச்சி.

  
கண்டுகொள்ளாத அதிகாரிகள்

  பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் சீனிவாசபுரம் ரெயில்வே பாலத்தின் கான்கீரிட் ஓடுதளம் பழுதடைந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. தற்போது கான்கீரிட் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஓடுதளத்தை சீரமைக்க வேண்டும்.
  ராகுல், ஜமீன்ஊத்துக்குளி.
  
  நாய்கள் தொல்லை

  கோவை ராமநாதபுரம், 80 அடி ரோடு மற்றும் சர்ச்ரோடு பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளை இழுத்து சாலையில் போடுகிறது. குறிப்பாக ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் மீது விழுவதோடு அவர்களை கடிக்க செல்கிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சப்படுகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகளையும் துரத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  திவ்யா, கோவை.
  

வேகத்தடை வேண்டும்

  கோத்தகிரிரியில் இருந்து ஊட்டி செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள கட்டபெட்டு பஜார் பகுதி போக்குவரத்து மற்றும் பொது மக்கள் நெரிசல் மிகுந்த சாலையாகும். இங்கு வேகத்தடை இல்லாததால் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எடுப்பார்களா?
  முருகேஷ், கட்டபெட்டு.
  
  
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

  ஊட்டி ஊராட்சி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட சுப்ரமணியபுரம் பகுதியில் பயணிகள் நலனுக்காக கட்டப்பட்டுள்ள நிழற் குடையில் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நிற்க வெண்டியுள்ளது. எனவே நிழற்குடை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ராஜேந்திரன், கக்குச்சி.
  
  
மதுக்கூடாரமான நிழற்குடை

  சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை பி.ஏ.பி., வாய்காலையொட்டி உள்ள நிழற்குடையில் சிலர்மது அருந்துவதுடன் காலி பாட்டில்களை உடைத்து அப்படியே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால், பொள்ளாச்சி உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து பஸ்சுக்கு காத்திருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  கன்னியப்பன், சுல்தான்பேட்டை.
  
  
  
கூடுதல் போலீசார் வேண்டும்

  சுல்தான்பேட்டை அடுத்த காமநாயக்கன்பாளையத்தில் 4 ரோடுகள் சந்திக்கும் இடம் உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை நேரத்தில் பயணிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அப்போது ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், சிறு, சிறு விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும் கூடுதலாக போலீசாரை நியமிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  கண்ணன், காமநாயக்கன்பாளையம்.
  
ஒளிராத மின்விளக்குகள்

  கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை விநாயகர் கோவில் வீதியில் மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஒளிரவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே ஒளிராமல் காணப்படும் மின்விளக்குகளை சீரமைத்து ஒளிரச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ஜெகன், கோவை.
 


Next Story