காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு
x
தினத்தந்தி 10 Dec 2021 5:39 PM IST (Updated: 10 Dec 2021 5:39 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை தலைமையில், பேரவைச் செயலாளர் தலைமை செயலகம் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி முன்னிலையில் பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் சிந்தனைச்செல்வன், .பிரகாஷ், மாரிமுத்து, ராஜா, வேல்முருகன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் அடங்கிய குழு நேற்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தணிக்கை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் முதல் நிகழ்வாக நம் நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவையொட்டி குழுவின் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டத்திற்கு முன்னதாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம், மாங்காடு பேரூராட்சி, செல்வகணபதி நகர் மற்றும் ஜனனி நகர் போன்ற பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்கு இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து குன்றத்தூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பயின்றுவரும் மாணவர்களுடன் உரையாற்றினார்கள்.

மேலும் வரதராஜபுரம் மகாலட்சுமி நகரில் அடையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பார்வையிட்டு அங்கு நீர்வள ஆதாரத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்கள்.

கால்நடை மருந்தகம்

அதனை தொடர்ந்து படப்பை அரசு கால்நடை மருந்தகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டுவதற்கு உடனடியாக பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் நீர் மறுசுழற்சி செய்யப்படும் முறை மற்றும் வேதிப்பொருட்கள் கையாளப்படும் முறைகளையும் கேட்டறிந்து ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை பார்வையிட்டு ஆஸ்பத்திரியில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காய்கறி சந்தையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 2011 - 12 முதல் 2018 - 19 வரையிலான ஆண்டுகளுக்கான அறிக்கைகளில் (உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் பிரிவு தணிக்கை, பொது மற்றும் சமூகப் பிரிவு தணிக்கை, பொருளாதார பிரிவு தணிக்கை, மாநில நிதி நிலை உள்ளிட்ட தணிக்கை பத்திகள்) குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, பதிவுத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதன்மை அலுவலர்களுக்கு

அறிவுறுத்தல்

மேலும் தமிழ்நாடு சட்டமன்ற குழு தெரிவிக்கையில் பல்வேறு காரணங்கள் மற்றும் புகார்களால் நிலுவையில் உள்ள பணிகளை சரி செய்யவும், அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை சரிவர பயன்படுத்தி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு உரிய நேரத்தில் கொண்டுவரவும் அனைத்து துறை முதன்மை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மக்களுக்கு தேனையான புதிய திட்டங்களை தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஆ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story