பி ஏ பி கால்வாயை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
பி ஏ பி கால்வாயை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
பொள்ளாச்சி
4 வழிச்சாலை அமைக்க பி.ஏ.பி. கால்வாய் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
4 வழிச்சாலை
மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி-கோவை ரோடு ஆச்சிப்பட்டியில் இருந்து திண்டுக்கல் வரை 4 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.3 ஆயிரத்து 649 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக சண்முகா நதி, அமராவதி ஆறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் புளியம் பட்டியில் பல்லடம் ரோட்டின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பி.ஏ.பி. கால்வாய்
இதற்கிடையில் அந்த வழியாக செல்லும் பி.ஏ.பி. கால்வாயை புதுப்பிக்கும் பணிகளும் நடக்கிறது. கால்வாய் மீது சாலை அமைத்து வாகனங்கள் செல்லும் வகையில் கான்கிரீட் தளம் அமைத்து கால்வாயை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.
இதற்கிடையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து விவசாயிகள் மேலும் கூறியதாவது:-
விரைந்து முடிக்க வேண்டும்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப் படுகிறது.
இதில் பூசாரிப்பட்டியில் தொடங்கும் கிளை கால்வாய் புளியம்பட்டி, பணிக்கம்பட்டி வழியாக ஆர்.பொன்னாபுரம் வரை செல்கிறது.
இதற்கிடையில் திண்டுக்கல்-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை பணிக்கு புளியம்பட்டியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே அதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story