தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
வீணாகும் குடிநீர்
நீலகிர் மாவட்டம் கேத்தி பகுதியில் குடிநீர் சரியாக வருவதில்லை. குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் சாலையில் வீணாக சென்று வருகிறது. இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் குடிநீருக்காக பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே உடைப்பை சரிசெய்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
செந்தில்குமார், கேத்தி.
நீர்வழிப்பாதையில் அடைப்பு
கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில் குளத்துக்கு செல்லும் மழைநீர் வடிகால் பகுதியில் அடைப்பு உள்ளது. இதனால் உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
சுந்தரமூர்த்தி, செல்வபுரம்.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
பள்ளம் சரிசெய்யப்பட்டது
கோவை புலியகுளத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரத்தில் பள்ளம் இருந்தது. இதனால் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சரிசெய்ய வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரிசெய்து உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
சுந்தரேசன், புலியகுளம்.
பயணிகள் நிழற்குடை
மதுக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட ஒக்கிலிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே பஸ்நிறுத்தம் உள்ளது. இங்கு நிழற்குடை இல்லாததால் பஸ்சுக்காக காத்து நிற்பவர்கள் கால்கடுக்க நிற்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் மழை பெய்தால் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று தஞ்சம் அடையும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
குப்புசாமி, ஒக்கிலிபாளையம்.
சுகாதார நிலையம் வேண்டும்
சுல்தான்பேட்டை அருகே உள்ள ஜல்லிபட்டியில் ஏராளமான பொதுமக்கள் உள்ளனர். ஆனால் இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் பொதுமக்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றால் பல கி.மீ. தூரம் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஏழை-எளிய பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஜல்லிபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
நடராசன், ஜல்லிபட்டி.
சேறும் சகதியுமான சாலை
கோவை சவுரிபாளையம் பாரதிபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை சேறும் சகதியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு நடந்து செல்ல பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே சேறும் சகதியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
லில்லி, பாரதிபுரம்.
ஒளிராத தெருவிளக்குகள்
கோவை மாவட்டம் காரே கவுண்டன்பாளையம் ஊராட்சி கெம்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீசாய் நகர், அன்புநகர், நியூ பாலாஜி நகரில் தெருவிளக்குகள் ஒளிரவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதான இந்த தெருவிளக்குகளை சரிசெய்து ஒளிர வைக்க வேண்டும்.
இளங்குமரன், அன்புநகர்.
நிரம்பி வழியும் குப்பை தொட்டி
கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் பஸ்நிலையம் பின்புறம் நேரு பூங்கா ரோட்டில் உள்ள குப்பை தொட்டி நிரம்பி வழிவதால் குப்பைகள் அங்குமிங்கும் கொட்டப்பட்டு உள்ளது. அவற்றை தெருநாய்கள் சாலையில் இழுத்து போடுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பூச்சிகளின் தொல்லையும் அதிகரித்து உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நிரம்பி வழியும் இந்த குப்பை தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.
ராஜசேகர், சிங்காநல்லூர்.
இருள் சூழ்ந்த பகுதி
கோவை மாநகராட்சி 17-வது வார்டு சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி முதல் பெருமாள் கோவில் வரை கடந்த 2 மாதங்களாக மின்விளக்குகள் ஒளிரவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் குற்ற சம்பவங்களும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்து அவற்றை ஒளிர செய்ய வேண்டும்.
ராசேந்திரன், சிக்கராயபுரம்.
பாதியில் நிற்கும் பணி
கோவை மருதமலை பஸ் நிலையம் எதிரில் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இந்த பணி தொடங்கி ஒரு மாதம் கடந்தும் பணி முடியவில்லை. தோண்டப்பட்ட நிலையில்தான் உள்ளது அங்கு கழீவுநீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. எனவே இந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, பாதியில் நிற்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும்.
பரமேசுவரன், மருதமலை.
சீரான குடிநீர் தேவை
மேட்டுப்பாளையம் பாரதி நகரில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குடிநீரும் ஒரு மணி நேரம் மட்டுமே விடப்படுகிறது. இந்த குடிநீர் போதிய அளவுக்கு இல்லை என்பதால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக தேடி அலையும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
சேகர், பாரதிநகர்.
Related Tags :
Next Story