சென்னையில் முதல் கட்டமாக மாநகர பஸ்களில் அவசர ஒலி அழைப்பு பட்டன் அமைச்சர் தகவல்


சென்னையில் முதல் கட்டமாக மாநகர பஸ்களில் அவசர ஒலி அழைப்பு பட்டன் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 15 Dec 2021 5:56 AM IST (Updated: 15 Dec 2021 5:56 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் முதல் கட்டமாக மாநகர பஸ்களில் அவசர ஒலி அழைப்பு பட்டன் அமைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

சென்னை,

நிர்பயா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பஸ்சிலும் 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதுபோல ஒவ்வொரு பஸ்சிலும் 4 அவசர அபாய ஒலி எழுப்பும் பட்டன் (பேனிக் பட்டன்) பொருத்தப்படும்.

முதல் கட்டமாக சென்னை மாநகர பஸ்களில் அந்த பட்டன்கள் பொருத்தப்பட உள்ளன. அவசர காலத்தில் இந்த பட்டனை அழுத்தினால், பஸ் பணிமனைக்கு தகவல் உடனடியாக சென்று சேரும். அதைத்தொடர்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலிங்

அரசு பஸ்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு நடந்தால் அது தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான இலவச தொலைபேசி எண்கள், அனைத்து பஸ்களிலும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

பஸ்களில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் பயணம் செய்கிறார்கள். ஆனால் சில கண்டக்டர்கள் அவர்களை இறக்கி விடுகின்றனர். எனவே இது தொடர்பாக டிரைவர், கண்டக்டர்களுக்கு ‘கவுன்சிலிங்’ கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ்கள்

மாணவர்கள் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை தடுக்கும் வகையில், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதை ஆர்.டி.ஓ. மூலம் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி போல பொங்கலுக்கும் சிறப்பு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, வரும் 29-ந் தேதி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story