ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது; கிலோ ரூ.40-க்கு விற்பனை

ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்து நேற்று ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை ஆனது.
ஈரோடு
ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்து நேற்று ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை ஆனது.
தக்காளி விலை உயர்வு
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கு மேற்பட்ட காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு காய்கறி வியாபாரம் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. கடந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையான தக்காளி, கிடுகிடுவென விலை உயர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த கலக்கம் அடைந்தனர்.
கிலோ ரூ.40-க்கு விற்பனை
தற்போது மழை பொழிவு குறைந்ததன் காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. இதனால் தக்காளி விலையும் படிப்படியாக குறைந்து வருகிறது.
நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக 1,500 முதல் 2 ஆயிரத்து 500 பெட்டிகள் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று 5 ஆயிரம் பெட்டிகள் தக்காளி வரத்தானது. இதனால் 25 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1,000-க்கும், 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.500-க்கும் விற்பனையானது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story






