பெண் இன்ஸ்பெக்டர்களின் கட்டுப்பாட்டில் போலீஸ் நிலையங்கள்; ஈரோட்டில் நிறைவேறும் பெரியார் கனவு


பெண் இன்ஸ்பெக்டர்களின் கட்டுப்பாட்டில் போலீஸ் நிலையங்கள்; ஈரோட்டில் நிறைவேறும் பெரியார் கனவு
x
தினத்தந்தி 17 Dec 2021 2:26 AM IST (Updated: 17 Dec 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் அதிகமானவை பெண் இன்ஸ்பெக்டர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. பெரியார் பிறந்த ஈரோட்டில் அவரது கனவு நிறைவேறுகிறது.

ஈரோடு
ஈரோடு மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் அதிகமானவை பெண் இன்ஸ்பெக்டர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. பெரியார் பிறந்த ஈரோட்டில் அவரது கனவு நிறைவேறுகிறது.
பெரியார் கனவு
பெண் உரிமைக்காக போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் தந்தை பெரியார். பெண் விடுதலை, ஆண்களுக்கு சமமாக பெண்கள் அனைத்து துறையிலும் சாதிக்க வேண்டும் என்று எழுதியும் பேசியும் வந்தவர். கடந்த அரை நூற்றாண்டாக தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் கொள்கைகள் பலவும் சட்டவடிவமாகி உள்ளன.
அந்த வகையில் காவல்துறையில் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது. அதுவும் குறிப்பாக பெரியார் மண்ணான ஈரோட்டில் காவல்துறையில் உள்ள பெண் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் காவல் நிலையங்கள் இருப்பது அவருடைய கனவு நிறைவேறுவதாக இருக்கிறது.
மகளிர் போலீஸ்
1991-ம் ஆண்டு மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டதில் இருந்து பெண் இன்ஸ்பெக்டர்களுக்கு மகளிர் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவுகளில் பணியாற்றுவது என்பது சவாலான விஷயமாகவே இருந்தது. அப்போது பெரும்பாலான பெண் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு அடிப்படையில் வந்தனர்.
ஆனால் கடந்த 2000-ம் ஆண்டுக்கு பின்னர் போலீஸ் துறையில் நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களாக பெண்கள் ஏராளமானவர்கள் பதவிக்கு வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சியின் போதே சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் பயிற்சி பெற்று வந்தவர்கள். தற்போது இவர்கள் அனைவரும் பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டர்களாக இருக்கிறார்கள். பொதுவாக பெண் இன்ஸ்பெக்டர்கள் என்றால் சிறப்பு காவல் பிரிவுகளில் பணி வழங்குவது வழக்கமாக இருக்கும்.
பெண் இன்ஸ்பெக்டர்கள்
ஆனால் சமீப காலமாக பெண் இன்ஸ்பெக்டர்கள் சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு ஈரோடு டவுன் துணைக்கோட்டத்தில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் 5 இடங்களில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் ஈரோடு மாநகரில் பெரும்பாலான போலீஸ் நிலையங்கள் பெண் இன்ஸ்பெக்டர்களின் கட்டுப்பாட்டுக்கு மாறி உள்ளது.
ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தெய்வராணி, ஈரோடு தெற்கு (சூரம்பட்டி) போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் விஜயா, கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நிர்மலா, மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தீபா, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நீலாவதி என்று 5 போலீஸ் நிலையங்கள் பெண் இன்ஸ்பெக்டர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஈரோடு குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வீரப்பன்சத்திரத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், ஈரோடு தாலுகாவில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் என 3 இன்ஸ்பெக்டர்கள் மட்டும் ஆண்களாக உள்ளனர். இதிலும் இவர்களுக்கு அடுத்த கட்டத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களே கூடுதல் பொறுப்பு ஏற்கும் பதவியில் உள்ளனர்.
அதிகாரம்
இது தவிர லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகா, சி.பி.சி.ஐ.டி. பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா, மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி என்று சிறப்பு பிரிவுகளிலும் பெண்கள் பணியாற்றுகிறார்கள். மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, குற்ற ஆவணங்கள் பாதுகாப்பு பிரிவுகளிலும் பெண்கள் இன்ஸ்பெக்டர்களாக இருக்கிறார்கள்.
இவ்வாறு பெண் விடுதலை பெற வேண்டும். பெண்கள் அதிகாரத்தில் வர வேண்டும் என்று கனவு கண்ட பெரியார் பிறந்த மண்ணில் காவல்துறை கட்டுப்பாடு பெண்களின் கையில் அதிகாரமாக வந்து உள்ளது.
அதே நேரம் பெண் அதிகாரிகளை சுதந்திரமாகவும், தைரியமாகவும் செயல்பட உயர் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். குடும்ப சூழல், சாதாரண பெண்களுக்கு உள்ள அத்தனை பிரச்சினைகளையும் தாங்களும் சுமந்து கொண்டு சமூக பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story