ஈரோடு மாவட்டத்தில் வங்கி பணியாளர்கள் 2,600 பேர் வேலை நிறுத்தம்; ரூ.600 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு


ஈரோடு மாவட்டத்தில் வங்கி பணியாளர்கள்  2,600 பேர் வேலை நிறுத்தம்; ரூ.600 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2021 2:33 AM IST (Updated: 17 Dec 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் வங்கி பணியாளர்கள் 2 ஆயிரத்து 600 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கியில் ரூ.600 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் வங்கி பணியாளர்கள் 2 ஆயிரத்து 600 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கியில் ரூ.600 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வேலை நிறுத்த போராட்டம்
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த நிதிநிலை பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கான வங்கிகள் சட்ட திருத்த மசோதா நடப்பு நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
2,600 பேர் பங்கேற்பு
அதன்படி நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் நேற்று பொதுத்துறை வங்கிகளின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு பணியாற்றும் 2 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கிளை மேலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் வேலைக்கு செல்லவில்லை. இதன்காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணம் செலுத்த முடியாமலும், பணம் எடுக்க முடியாமலும், காசோலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமலும் பொதுமக்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் வங்கிகளின் நுழைவு வாயில் பகுதியில் வேலை நிறுத்தம் குறித்து அறிவிப்பு ஒட்டப்பட்டு இருந்தது. அதே நேரம் தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி ஊழியர், அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கியகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் வங்கி அதிகாரிகள், சங்க பொறுப்பாளர்கள் வடிவேல் முருகேஷ், சங்கர், செல்வம், வங்கி ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் நரசிம்மன், சூரிய நாராயணன், முகுந்தன் மற்றும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
ரூ.600 கோடி...
வேலை நிறுத்த போராட்டம் குறித்து, ஈரோடு வங்கி ஊழியர் சங்க தலைவர் நரசிம்மன் கூறியதாவது:-
இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிளைகளை சேர்ந்த 2 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நாள் ஒன்றுக்கு நடக்கும் ரூ.600 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது.
கொடுமுடி
எனினும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நேற்றே (அதாவது நேற்று முன்தினம்) அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் தேவையான பணம் நிரப்பப்பட்டு உள்ளது. எங்களுடைய வேலை நிறுத்த போராட்டம் நாளையும் (அதாவது இன்று) தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கொடுமுடி, ஊஞ்சலூர், நடுப்பாளையம், சோளங்காபாளையம், சாலைப்புதூர், தாமரைப்பாளையம், சிவகிரி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருந்தன. 

Next Story