தினத்தந்தி புகாா் பெட்டி


தினத்தந்தி புகாா் பெட்டி
x
தினத்தந்தி 17 Dec 2021 2:42 AM IST (Updated: 17 Dec 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா் பெட்டி

பெயர் பலகை வைக்கப்படுமா? 
அந்தியூரில் இருந்து மைசூர் செல்லும் ரோட்டில் மூலக்கடை பகுதியில் 3 ரோடு சந்திப்பு உள்ளது. அந்த சந்திப்பில் இருந்து மைசூரு செல்லும் ரோடு, அந்தியூர் செல்லும் ரோடு, வெள்ளித்திருப்பூர் செல்லும் ரோடு ஆகிய 3 ரோடுகள் பிரிந்து செல்கிறது. ஆனால் எந்த ஊருக்கு எந்த ரோடு செல்கிறது என்ற அறிவிப்பு பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் எந்த ரோடு வழியாக செல்ல வேண்டும் என்பது தெரியாமல் அங்குள்ளவர்களிடம்  விசாரிக்கின்றனர். எனவே 3 ரோடு சந்திப்பில் எந்த ஊருக்கு எந்த ரோடு செல்கிறது என்ற பெயர் பலகையை வைக்க வேண்டும். 
பூபதி, அந்தியூர்.

பழுதடைந்த பாலம்
சிவகிரி அருகே உள்ள பொரசமேட்டுபுதூர் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. தற்போது இந்த பாலம் பழுதடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக கனரக வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக செல்லும்போது இடிந்து விழும் ஆபத்து உள்ளது. எனவே இந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், சிவகிரி.


மின் கம்பத்தில் செடி 
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் புஞ்சை பாலதொழுவு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி காசிபாளையம். இங்குள்ள புதுக்காலனி பகுதியில் பள்ளிக்கூடத்தின் பின்புறம் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து மின் கம்பிகளோடு பின்னி கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. எனவே மின்கம்பத்தில் படர்ந்த செடி, கொடிகளை அகற்ற மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேந்திரன், பி.காசிபாளையம்.

உடைந்த நடை மேம்பாலம் 
ஈரோடு காந்திஜி ரோட்டில் பெரும்பள்ளம் ஓடை மேம்பாலம் உள்ளது. இங்கு பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடை உடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் உடைந்த நடை மேம்பாலத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோ, ஈரோடு.

பாராட்டு 
ஈரோடு பழையபாளையம் சண்முகவள்ளி நகர் அருகே உள்ள பகுதியில் மின் கம்பம் ஒன்று பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து பழுதடைந்து காணப்பட்ட மின் கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் மாற்றி அமைத்து நடவடிக்கை எடுத்தனர். இதுபற்றி செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 
பொதுமக்கள், பழையபாளையம்.
-------------

Next Story