ஈரோட்டில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; முன்னாள் அமைச்சர்கள்-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


ஈரோட்டில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; முன்னாள் அமைச்சர்கள்-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 18 Dec 2021 2:06 AM IST (Updated: 18 Dec 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

ஈரோடு
ஈரோட்டில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். 
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் ஆகியவற்றின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், புறநகர் மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை), ஏ.பண்ணாரி (பவானிசாகர்), ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயரும், மாவட்ட மகளிர் அணி செயலாளருமான மல்லிகா பரமசிவம் ஆகியோர் பேசினார்கள்.
கோரிக்கைகள்
தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அம்மா மினி கிளினிக்-குகளை மூடக்கூடாது. விலைவாசியை குறைக்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
நகைக்கடன் தள்ளுபடி அனைவருக்கும் வழங்க வேண்டும்.   மாணவ- மாணவிகளுக்கு         மடிக் கணினிகள் உடனடியாக வழங்க வேண்டும். கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்க வேண்டும். மின்சார தடை இருக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆமைவேகம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோடு மாவட்டம் தன்னிறைவு பெற்றது. குடிநீர் திட்டங்கள், பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்திருந்தால், இந்த (டிசம்பர்) மாதத்தில் அனைத்து திட்டங்களும்   திறப்பு   விழா காணப்பட்டு இருக்கும். ஆனால், தற்போது அனைத்து பணிகளும் ஆமை வேகத்தில் நடக்கிறது. எப்போது திட்டப்பணிகள் முடியும் என்று தெரியவில்லை.
இதுபோல் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றார்கள். விலக்கு அளிக்க முடிந்ததா? ஆனால் முன்னாள் முதல்- அமைச்சர், துணை முதல் -அமைச்சர் ஆகியோர் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 435 பேருக்கு டாக்டர் சீட் கிடைத்தது.
 வரும் காலத்தில் நாம் ஆட்சியை பிடிப்பது உறுதி. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சிறப்பான வெற்றி பெற வேண்டும். கோட்டையில் இருப்பவர்கள் அச்சப்படும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி அமைய வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
பணிகள் செய்ய தடை
இதுபோல் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசும்போது, அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், வளர்ச்சித்திட்ட பணிகள் செய்யவும், தி.மு.க. அரசு தடை போடுகிறது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு, ஈஸ்வரன், பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிச்சாமி, ரா.மனோகரன், ஜெகதீசன், கோவிந்தராஜன், முருகுசேகர், தங்கமுத்து, ஒன்றிய செயலாளர் பூவேந்திரகுமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் வீரக்குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நந்தகோபால், ஜெயராமன் வக்கீல் துரைசக்திவேல், காவிரி செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் கே.எஸ்.கோபால், நாச்சிமுத்து, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றத் தலைவர் ஏ.கே.சாமிநாதன், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க.முன்னாள் செயலாளர் திங்களூர் கந்தசாமி, பெருந்துறை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் ஆர்.பழனிசாமி, புறநகர் கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு நல செயலாளர் ஜே.மார்ட்டின்ராஜ், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் அருள்ஜோதிசெல்வராஜ், பெருந்துறை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் டி.வி.ரஞ்சித்ராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா, தெய்வநாயகி ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். முடிவில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கேசவமூர்த்தி நன்றி கூறினார். 
1 More update

Next Story