சென்னிமலையில் குழந்தைகளுக்கு ஆதார் புகைப்படம் எடுக்க காத்திருந்த பெற்றோர்; பணியாளர்கள் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்


சென்னிமலையில் குழந்தைகளுக்கு ஆதார் புகைப்படம் எடுக்க காத்திருந்த பெற்றோர்; பணியாளர்கள் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
x
தினத்தந்தி 18 Dec 2021 2:38 AM IST (Updated: 18 Dec 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலையில் குழந்தைகளுக்கு ஆதார் புகைப்படம் எடுக்க காத்திருந்த பெற்றோர் பணியாளர்கள் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சென்னிமலை
சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள குழந்தைகள் மையத்தில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நேற்று ஆதார் புகைப்படம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காலை 7 மணிக்கே சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் தங்களது கைக்குழந்தையுடன் காமராஜ் நகர் அரசு பள்ளிக்கு வந்தனர். இதில் முதலில் வந்த சுமார் 120 குழந்தைகளின் பெயர்களை அங்கன்வாடி பணியாளர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் 11 மணிக்கு மேல் ஆகியும் ஆதார் புகைப்படம் எடுக்க பணியாளர்கள் யாரும் வரவில்லை. 
மேலும் ஆதார் புகைப்படம் எடுப்பது குறித்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் எந்த வித தகவலும் இல்லாததால் அவர்களால் பொதுமக்களுக்கு முறையான பதில் சொல்ல முடியவில்லை. நீண்ட நேரம் காத்திருந்ததால் பல குழந்தைகள் பசி தாங்காமல் அழுதனர். அதன்பின்னர் 11.30 மணியளவில் ஆதார் புகைப்படம் எடுக்க யாரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் குழந்தைகளுடன் வந்து காத்திருந்த பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.

Next Story