ஈரோடு மாவட்டத்தில் 34 அரசு பள்ளிக்கூடங்களில் பழுதடைந்த கட்டிடங்கள்; இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவு


ஈரோடு மாவட்டத்தில் 34 அரசு பள்ளிக்கூடங்களில் பழுதடைந்த கட்டிடங்கள்; இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 19 Dec 2021 3:00 AM IST (Updated: 19 Dec 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் 34 கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றை இடித்து அகற்ற கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் 34 கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றை இடித்து அகற்ற கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார்.
ஆய்வுக்குழு
நெல்லையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் பழுதடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பழுதடைந்த பள்ளிக்கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
மாவட்ட கலெக்டர்கள் களத்தில் இறங்கி பள்ளிக்கூடங்களில் ஆய்வு செய்து, பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் அபாயகரமான நிலையில் உள்ள பள்ளிக்கூடங்கள் குறித்து கணக்கெடுக்க குழு அமைத்து ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார்.
எச்சரிக்கை
அதன்பேரில் பொதுப்பணித்துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சி முகமை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே முன்னதாகவே ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த கட்டிடங்கள் பழுதடைந்தவை என்றும், எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
34 பள்ளிக்கூடங்கள்
இதுபற்றி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் பழுதடைந்த கட்டிடங்கள் கணக்கெடுக்கும் பணி சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியது. ஈரோடு மாவட்ட கண்காணிப்பு பொறுப்பு அதிகாரியின் ஆலோசனையின் பேரில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி இது தொடர்பான நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 34 அரசு பள்ளிக்கூடங்களில் பழுதடைந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டது. இந்த கட்டிடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்தனர். அந்த கட்டிடங்கள் இனிமேல் பயன்படுத்த முடியாது என்பது உறுதி செய்யப்பட்டு அந்த கட்டிடங்களின் அருகே யாரும் செல்லாமல் இருக்க எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது.
கட்டிடம் இடிப்பு
அந்தியூர், முகாசிபுதூர், குள்ளம்பாளையம் உள்ளிட்ட 34 இடங்களில் பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்க தயாராக இருந்தன. இதில் முகாசி புதூர் அரசு பள்ளி கட்டிடம் மிக ஆபத்தான நிலையில் இருந்ததால் அதனை உடனடியாக இடிக்க கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. மேலும் மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களை இடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் 20-ந் தேதி (அதாவது நாளை) நடைபெறுகிறது. இதற்கிடையே தனியார் பள்ளிக்கூடங்களில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பழுதடைந்த கட்டிங்களை இடிக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும் நேற்று முதல் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நெல்லையில் மாணவர்களின் உயிரைக்குடித்த நிகழ்வுக்கு பின்னர் இந்த பணியில் அதிகாரிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஈரோடு மாவட்ட கலெக்டர் முன்கூட்டியே இதற்கான பணியில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story