படப்பை அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரை முற்றுகையிட்ட பக்தர்கள்


படப்பை அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரை முற்றுகையிட்ட பக்தர்கள்
x
தினத்தந்தி 19 Dec 2021 7:09 PM IST (Updated: 19 Dec 2021 7:09 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரை பக்தர்கள் முற்றுகையிட்டனர்.

ஆக்கிரமிப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் அடையாறு ஆற்றின் பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் மற்றும் நரசிம்ம ஆஞ்சநேயர் கோவிலை கட்டியுள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து குன்றத்தூர் தாசில்தார் ப்ரியா, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் பிரபு ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த கட்டிடம் மற்றும் கோவிலை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர்.

போராட்டம்

கோவிலின் மேற்கூரையை இடிக்க அதிகாரிகள் முயன்றபோது கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் கோவிலின் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருபுறம் அதிகாரிகள் கோவிலை இடிக்க தொடர்ந்து முயன்றனர்.

அப்போது அங்கு வந்த காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. செயலாளர் பார்த்தசாரதி, மற்றும் விசுவ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் ராமன், இந்து முன்னணி மாநில செயலாளர் ரவீந்தரன், பா.ஜ.க. மண்டல தலைவர் அமர்நாத் யோகேஷ்வர் மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் சதாம் உசேன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் தாசில்தாரிடம் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை

இந்தநிலையில் ஒரு சிலர் கோவிலின் உச்சிப் பகுதியில் உள்ள கோபுரம் மீது ஏறி கோவிலை இடிக்க கூடாது என்று கோஷமிட்டனர். அங்கு வந்த பொதுமக்கள் பக்தர்கள், மற்ற அமைப்பினரை சேர்ந்தவர்கள் கோவிலை மட்டும் ஏன் குறி வைத்து இடிக்கிறிர்கள்? நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்படுமா? என்று கூறி தாசில்தாரை முற்றுகையிட்டனர்.

இதனால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story