ஈரோட்டை பிரித்து கோபியை தனிமாவட்டமாக உருவாக்க வேண்டும்; அமைச்சரிடம், கொ.ம.தே.க. கோரிக்கை
ஈரோட்டை பிரித்து கோபியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமியிடம், கொ.ம.தே.க. கோரிக்கை விடுத்து உள்ளது.
ஈரோடு
ஈரோட்டை பிரித்து கோபியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமியிடம், கொ.ம.தே.க. கோரிக்கை விடுத்து உள்ளது.
கலந்தாய்வு கூட்டம்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் என்ற பெயரில் கோரிக்கை மனு வழங்கும் நிகழ்ச்சி பரிமளம் அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கட்சியின் மாநில நிர்வாகிகள் எஸ்.ஜெகநாதன், கே.கே.சி.பாலு, எஸ்.சூரியமூர்த்தி, டாக்டர் ஆர்.சதாசிவம், எஸ்.சுரேஷ் பொன்னுவேல், துரை.ராஜா மற்றும் காசியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்றார்.
கோரிக்கை
அவரிடம் மாவட்ட செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, கொங்கு கோவிந்தராஜ், எஸ்.ஆர்.முத்துசாமி, கே.பி.சாமிநாதன், எஸ்.பிரபாகரன், என்.எஸ்.சிவராஜ், கே.லோகநாதன், பி.ஈ.டீகுமார் ஆகியோர் அந்தந்த பகுதி கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார்கள். தொடர்ந்து கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான கோரிக்கைகள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கி பேசினார்.
கோபி மாவட்டம்
இதையடுத்து ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோட்டின் அடையாளமாக கருதப்படுபவர்.
ஈரோடு மாவட்டத்துக்கான பல கோரிக்கைகளை கொடுத்து இருக்கிறோம். இதில் முக்கிய கோரிக்கையாக நாங்கள் வைப்பது ஈரோடு மாவட்டத்தை 2 ஆக பிரித்து கோபியை தலைமையாக கொண்டு கோபி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதாகும்.
புவிசார் குறியீடு
இப்போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கூடியவராக அமைச்சர் சு.முத்துசாமி உள்ளார். உங்களால் முடியவில்லை என்றால் வேறு யாராலும் முடியாது. இதுபோல் ஈரோட்டில் தொழில் பாதிப்பு ஏற்படாமல் கழிவு நீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நிதி தர தயாராக இருக்கிறது. அதை பெற முயற்சிக்க வேண்டும். கவுந்தப்பாடி நாட்டுச்சர்க்கரைக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொலைநோக்கு திட்டம்
கோரிக்கைகளை கவனமுடன் கேட்டுக்கொண்ட அமைச்சர் சு.முத்துசாமி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கு கொடுக்கப்பட்ட கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஏற்கனவே எங்களது செயல் திட்டத்தில் உள்ளவைகள் ஆகும்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 திட்டங்கள் கூறப்பட்டது. அதில் 300 திட்டங்களுக்கு மேல் நிறைவேற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. மேலும் கூடுதல் திட்டங்கள் சேர்க்கப்பட்டு முதல்-அமைச்சரின் தொலைநோக்கு திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அளித்து இருக்கும் கட்டளைகளில் ஒன்று எதிர்க்கட்சியினரின் மனம் நோகும்படி பேசக்கூடாது என்பதாகும். செய்து முடித்த திட்டங்கள் பற்றி பேச வேண்டாம். இனி என்ன செய்யப்போகிறோம் என்பதை சிந்தித்து நிறைவேற்றுங்கள் என்று கூறுவார்.
பாகப்பிரிவினை
ஈரோட்டில் சோலாரில் புதிய பஸ் நிலையம் இன்னும் 1 மாதத்தில் தற்காலிகமாக தொடங்கப்படும். கனிராவுத்தர் குளம் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய இருக்கிறோம். அறச்சலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். ஜவுளி பல்கலைக்கழகம் கொண்டு வரப்படும்.
ஈரோடு மாவட்டத்தை பிரித்து கோபி மாவட்டம் உருவாக்குவது தொடர்பாக கேட்டு இருக்கிறீர்கள். அப்படி ஒரு பிரிவு வந்தால் சகோதரர்களுக்குள் ஏற்படும் பாகப்பிரிவினை போன்றுதான் அது இருக்கும். 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்பது 4 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டமாக மாறினால் இன்னும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், மாவட்டம் பிரிக்க பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அதுபற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவு எடுப்பார்கள். இந்த கோரிக்கை முதல்-அமைச்சரிடம் எடுத்துச்செல்லப்படும்.
ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்
கவுந்தப்பாடி நாட்டுச்சர்க்கரைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். சி.என். கல்லூரி விரைவில் அரசு கல்லூரியாக மாற்றப்படும். இந்த கல்லூரி இடத்தில் ரூ.35 கோடியில் தரமான உள்விளையாட்டு அரங்கம் கொண்டு வரப்படும். அனைத்து வகை உள் விளையாட்டு அரங்குகளும் கொண்டு வரப்படும். மிகப்பெரிய நூலகம், ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்படும்.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடுவது தொடர்பாக 147 இடங்களில் விவசாயிகளிடம் கருத்து கேட்டு அவர்களின் விருப்பப்படி பணிகள் செய்யப்படும். சிப்காட் கழிவுகள் வெளியேறாத வகையில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். சிவகிரியில் கலை அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சூரிய சக்தி மின்சாரம்
குறிப்பாக நமது ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்யும் வகையில் சூரிய சக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்.
இங்கே கொடுக்கப்பட்டு உள்ள 141 கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். உள்ளாட்சி கவுன்சிலரால் ஒரு எம்.எல்.ஏ. செய்ய முடியாத பணியை செய்ய முடியும். எனவே ஆளும் கட்சியாக நாம் இருக்கிறபோது, நமது கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலராக வந்தால் அனைத்து தேவைகளையும் 100 சதவீதம் நிறைவேற்ற முடியும். எனவே இதை கருத்தில் கொண்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்து வெற்றி ஈட்ட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
Related Tags :
Next Story