அரசு பஸ்களில் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க நடவடிக்கை; நிறுத்தங்களில் நின்று சோதனை செய்யும் போக்குவரத்து கழக அதிகாரிகள்
அரசு பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக பஸ் நிறுத்தங்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
ஈரோடு
அரசு பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக பஸ் நிறுத்தங்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
படிக்கட்டில் பயணம்
தமிழ்நாட்டில் அரசு பஸ்களில் பயணம் செய்பவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஐகோர்ட்டு நடத்தை விதிமுறைகள் அறிவித்துள்ளது. குறிப்பாக அரசு பஸ்களில் பயணம் செய்யும் பள்ளிக்கூட மாணவ -மாணவிகள் கல்லூரி மாணவ- மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் சோதனை
அதன்பேரில் ஈரோடு மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டல பொது மேலாளர் குமார் உத்தரவின் பேரில், ஈரோடு மண்டல வணிக பிரிவு துணை மேலாளர் ஆர்.ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் படிக்கட்டில் நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஈரோட்டில் போக்குவரத்து ஆய்வாளர் ஜி.செல்வராஜ் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகள் அரசு பஸ்களை கண்காணித்து வருகிறார்கள். மேலும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, பன்னீர்செல்வம் பூங்கா, போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பஸ் நிறுத்தம் உள்ளிட்ட அதிக மக்கள் வந்து செல்லும் பஸ் நிறுத்தங்களில் உயர் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பஸ்சில் ஏறும் மாணவ- மாணவிகள் மற்றும் பெண்கள் பஸ்சின் உள்பகுதியில் சென்று பாதுகாப்பாக நிற்பதை உறுதி செய்த பின்னரே பஸ்களை இயக்க டிரைவர் -கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் முக்கிய வழித்தடங்களில் அதிக அளவு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் பொது மக்கள் நெருக்கிக்கொண்டு பயணிப்பதை தவிர்க்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
Related Tags :
Next Story