கல்பாக்கம் அருகே போலி மதுபான ஆலை நடத்திய 4 பேர் கைது


கல்பாக்கம் அருகே போலி மதுபான ஆலை நடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Dec 2021 7:47 PM IST (Updated: 20 Dec 2021 7:47 PM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே போலி மதுபான ஆலை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து ரூ. 25 லட்சம் மதிப்புள்ள மதுபானம், மதுபானம் தயாரிக்க பயன்படும் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

போலி மது பான ஆலை

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தின் பின்புறம் 2 கி.மீ. தொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஒரு புதிய பங்களா உள்ளது. இந்த பங்களாவை வாடகைக்கு எடுத்து சிலர் போலி மதுபான ஆலை நடத்துவதாக காஞ்சீபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற உளவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய கலால் அமலாக்க பிரிவு கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் மதுவிலக்கு கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலசந்தர் உள்பட தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அந்த பங்களாவில் திடீர் சோதனை நடத்தினர்.

4 பேர் கைது

இதில் 16 பிளாஸ்டிக் கேன்களில் எரிசாராயம், அட்டைப்பெட்டிகளில் போலி மதுபானம் நிரம்பிய 5 ஆயிரத்து 100 பாட்டில்கள், மது தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் மற்றும் அதற்கான எந்திரங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் என்று கூறப்படுகிறது.

பொருட்களை அங்கிருந்து கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லாவண்யா (31) மற்றும் அவரது உறவினரான ஜெயலட்சுமி ( 39) மணிகண்டன் (30) மற்றும் சதுரங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்த சதீஷ் (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story