ஈஸ்வரன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்


ஈஸ்வரன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
x
தினத்தந்தி 20 Dec 2021 8:44 PM IST (Updated: 20 Dec 2021 8:44 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
கோபி
ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. 
கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 3 மணி அளவில் ஹோமங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து நடராஜர், மரகத ஈஸ்வரிக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமி அருள்பாலித்தார். அப்போது சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஈஸ்வரன் கோவில்
இதேபோல் கோபி டவுன் அக்ரகாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி நடராஜர், சிவகாம சுந்தரி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரி ஆகியோர் அருள்பாலித்தனர். பின்னர் கோவிலின் உள் பிரகாரத்தில் சாமியும், அம்மனும் எழுந்தருளினர். 
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தி பஜனை பாடல்களையும் பக்தர்கள் பாடினர். அப்போது பெண் பக்தர்களுக்கு தாலிச் சரடு, குங்குமம் வழங்கப்பட்டது.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி விநாயகர், விசாலாட்சி விஸ்வேஸ்வரர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, கால பைரவர், சூரிய பகவான் ஆகிய சாமிகள் பக்தர்களுக்கு வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இதேபோல் கோபி விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில், கோபி அருகே உள்ள பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில், கோபி கிருஷ்ணன் வீதியில் உள்ள கருப்பராயன் கோவில், மாதேசியப்பன் வீதியில் உள்ள மாதேஸ்வரர் கோவில், வடக்கு வீதியில் உள்ள பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவில் உள்பட கோபி பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. 
அம்மாபேட்டை
அம்மாபேட்டை காவிரிக்கரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவாதிரை நாளையொட்டி நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. 
முன்னதாக அங்குள்ள சிவகாமி, நடராஜர் உற்சவர் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக திருவாதிரை களி மற்றும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு போன்றவை வழங்கப்பட்டது. 
இதில் அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, பூதப்பாடி, குருவரெட்டியூர், கோனேரிப்பட்டி, சித்தார், ஊமாரெட்டியூர், பூலாம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். 
சிவகிரி 
திருவாதிரை நாளையொட்டி சிவகிரி வேலாயுத சாமி கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனம் மற்றும் மாங்கல்ய விழா நடைபெற்றது. இதற்காக அதிகாலை 4.30 அணி அளவில நடராஜர், சிவகாமி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் சாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கல்ய சரடு வாங்கி அணிந்து கொண்டனர். மேலும் இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக திருவாதிரை களி வழங்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதிகள் உலா நடைபெற்றது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் காத்து நின்று தேங்காய், பழம் உடைத்து சாமியை வழிபட்டனர்.
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. திருவாதிரையையொட்டி இந்த கோவிலில் நடராஜரின் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதற்காக கோவிலில் உள்ள சனீஸ்வரர் மண்டபத்துக்கு நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோர் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து 16 அபிஷேக திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடராஜருக்கும் சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஆருத்ரா தரிசனம் முடிந்ததும் நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோர் வீதி உலா கோவில் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
முன்னதாக நேற்று முன்தினம் மாலையில் கோவில் உள் பிரகாரத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும், உமா மகேஸ்வரர் வீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டார்கள்.
பொதுவாக கொடுமுடியில் வருடத்தில் 2 நாட்கள் மட்டுமே நடராஜர் கருவறையை விட்டு வெளியே எழுந்தருளுவது வழக்கம். அதாவது சித்திரை தேர் திருவிழாவின் போதும், திருவாதிரை ஆருத்ரா தரிசனத்திற்காக மட்டுமே கருவறையை விட்டு வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவையொட்டி நடராஜர் சிறப்பு அலங்கார அபிஷேகங்களை பிரபு குருக்கள் செய்திருந்தார்.
பவானி
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் நடராஜமூர்த்திக்கு மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களாலும், பால், நெய், தயிர், இளநீர், பஞ்சாமிர்தத்தாலும் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிவகாமி உடனமர் நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின்னர் கோவில் பிரகாரத்தில் சாமி திருவீதி உலா நடந்தது. இந்த ஆருத்ரா தரிசன விழாவில் நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர், கொளாநல்லி, கொந்தளம் கோவில்களில் நேற்று காலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவிலில் நடராஜர், சிவகாமி, விநாயகர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
இதேபோல் ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவில், கொந்தளம் நாகேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிசேக பூஜை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. அப்போது கயிலாய வாத்திய இசையுடன் பெண் பக்தர்கள் கும்மியடித்தபடி சென்றனர். வீதி உலா புஞ்சைபுளியம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது

Next Story