போலி உரம் தயாரித்த குடோனுக்கு ‘சீல்’
பொள்ளாச்சி அருகே போலி உரம் தயாரித்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே போலி உரம் தயாரித்த குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
போலி உரம்
பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜே.சி. கார்டனில் ஒரு தோட்டத்தில் உள்ள குடோனில் போலியாக பொட்டாசியம் உரம் தயாரிப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தாசில்தார் அரசகுமார் தலைமையிலான வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் அந்த தோட்டத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளிகள் கோலப்பொடி தயாரிப்பதாக கூறினார்கள். இதனால் சந்தேமடைந்த அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது போலி பொட்டாசியம் உரம் தயாரித்து மூட்டைகளில் வைத்திருந்தது தெரியவந்தது.
குடோனுக்கு ‘சீல்’
இதற்கிடையில் அங்கு தாலுகா போலீசார் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் போலியாக பொட்டாசியம் உரம் தயாரித்தது உறுதியானது. இதையடுத்து குடோனை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:-
குரும்பபாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான இடத்தை வாழைக்கொம்பு நாகூரை சேர்ந்த தேவராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து போலியாக பொட்டாசியம் உரம் தயாரித்து வந்ததாக தெரிகிறது. காவி பொடி, கோலப்பொடி, உப்பு, சிறிது பொட்டாசியம் உரத்தை கலந்து தயாரித்து உள்ளனர். இதற்காக அரசு மானியம், உர விலை போன்ற விவரங்கள் அச்சிடப்பட்ட பைகளை பயன்படுத்தி உள்ளனர். குடோனில் இருந்து 10 டன் போலி உரம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கடும் நடவடிக்கை
அந்த குடோனில் இருந்து போலி உரம் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். ஆய்வு முடிவிற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொட்டாசியம் உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்ய கூடாது. பழைய விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகள் பயிர் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். உரங்களை வாங்கும்போது போலியானதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். போலியாக உரம் தயாரிக்கும் நபர்கள் மற்றும் கூடுதல் விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story