எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நிறுத்தம்


எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Dec 2021 11:03 PM IST (Updated: 20 Dec 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

சாக்குப்பைக்கு விலை நிர்ணயிப்பதில் விவசாயிகள்-வியாபாரிகள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது.

சாக்குப்பைக்கு விலை நிர்ணயிப்பதில் விவசாயிகள்-வியாபாரிகள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது.
சாக்குப்பை பிரச்சினை
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தேங்காய் ஏலமும், திங்கட்கிழமை கொப்பரை தேங்காய் ஏலமும் நடைபெறுவது வழக்கம். விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் கொப்பரை தேங்காய்களை சாக்கு பைகளில் போட்டு எடுத்து வருவது வழக்கம். வியாபாரிகள் சாக்குப்பையோடு சேர்ந்து விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காயை வாங்குவார்கள். இதற்காக சாக்குப்பை ஒன்றுக்கு விவசாயிகளிடம் ரூ.10 வீதம் வியாபாரிகள் வழங்குவார்கள்.
ஆனால் கடந்த 6 மாதங்களாகவே சாக்குப்பைக்கு வியாபாரிகள் உரிய தொகை வழங்குவதில்லை என்றும், கொப்பரை தேங்காய் மொத்த எடையில் இருந்து சாக்குப்பைக்கு ஒரு கிலோ பிடித்தம் செய்து பணம் வழங்குவதாகவும் விவசாயிகள் வியாபாரிகளிடம் கூறி கடந்த வாரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏலம் நடக்கவில்லை
இதனால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும், சனிக்கிழமை பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறவில்லை. இதில் வியாபாரிகளும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுதொடர்பாக நேற்று பகல் 11 மணி அளவில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் இடையே ஆலோசனை மற்றும் சமாதான பேச்சுவார்த்தை எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பெருந்துறை, அவல்பூந்துறை, ஈரோடு, அறச்சலூர், மொடக்குறிச்சி, சிவகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூடியிருந்தனர்.
பேச்சுவார்த்தை
விவசாயிகள் தரப்பில் எழுமாத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் சாவித்திரி, கண்காணிப்பாளர்கள் லட்சுமிபதி சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்திருந்தனர். ஆனால் மதியம் வரை வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதைத்தொடர்ந்து விவசாயிகள்-அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
விவசாயிகள்
அப்போது விவசாயிகள் அதிகாரிகளிடம், கொப்பரை தேங்காய்க்காக தாங்கள் கொண்டு வரும் சாக்குப்பைகளை விவசாயிகளிடம் திரும்ப கொடுத்துவிட வேண்டும் அல்லது சாக்குப்பைக்காக 1 கிலோ மொத்த எடையில் கழிக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.
அதற்கு அதிகாரிகள், உங்களின் கோரிக்கைகள் குறித்து வியாபாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போராட்டம் நடத்தப்படும்
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘உரிய நடவடிக்கை எடுக்கும்வரை அனைத்து பகுதி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கும் கொப்பரை தேங்காய்களை கொண்டு செல்லமாட்டோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட அளவிலான போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.
இதுகுறித்து வியாபாரிகளிடம் நிருபர் கேட்டபோது அவர்கள் கூறும்போது, ‘பொங்கல் பண்டிகை முடியும்வரை சாக்குப்பைக்கு தனியாக விலை கேட்காத வெள்ளகோவில், கொடுமுடி, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யலாம். அதுவரை சாக்குப்பைக்கு விலை கோரும் எழுமாத்தூர், வேலூர், ஜலகண்டாபுரம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.
---

Related Tags :
Next Story