ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் நல்லெண்ணெய், தேங்காய்-கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் த.மா.கா.வினர் மனு
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் த.மா.கா.வினர் மனு கொடுத்தனர்.
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் த.மா.கா.வினர் மனு கொடுத்தனர்.
தேங்காய் எண்ணெய்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கையை மனுவாக கொடுத்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் விடியல்சேகர் தலைமையில் மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி தலைவர் சம்பத்குமார், பொதுச்செயலாளர் ரபிக் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக தற்சார்பு கொள்கைக்கு வழிவகுக்க கூடிய நமது மண்ணில் விளையக்கூடிய கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
மூலப்பொருட்கள் விலை உயர்வு
ஈரோடு மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் திருமூர்த்தி தலைமையில் 48 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
மூலப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜவுளி மீதான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. சிறு, குறு தொழில்கள் உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதமும், ஏற்றுமதியில் 40 சதவீதமும் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் 45 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
தற்போதைய நிலையில் பல்வேறு சிறு குறு தொழில்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. இதனால் வங்கிகள் தங்கள் கடன் தொகையை திருப்பி பெற கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சம் உள்ளது. எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு மூலப் பொருட்களின் விலை உயர்வை ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறையோ நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
புதிய தொழிற்சாலைகள்
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘எனது வீட்டு மின் இணைப்புக்கு அதிக அளவில் மின் கட்டணம் வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ரூ.23 ஆயிரம் செலுத்தும்படி வலியுறுத்தி வருகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
பெருந்துறை சிப்காட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளால் நிலம், நீர், காற்று மாசுபட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. அங்குள்ள தொழிற்சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. எனவே அங்கு புதிய தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது’ என்று கூறி இருந்தனர்.
நூலகத்தை திறக்க வேண்டும்
ஈரோடு முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள இளைஞர்கள், இளம் பெண்கள், பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் படிப்போர் எங்கள் பகுதியில் உள்ள நூலகத்தை பயன்படுத்தி வந்தோம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த நூலகம் திறக்கப்படவில்லை.
இதனால் நாங்கள் டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராக முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே எங்கள் பயன்பாட்டிற்காக நூலகத்தை உடனடியாக திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
243 மனுக்கள்
இதேபோல் மொத்தம் 243 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், உதவி ஆணையாளர் (கலால்) ஜெயராணி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி ரங்கநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மீனாட்சி, மாவட்ட வழங்கல் அதிகாரி இலாஹிஜான் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story