மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் அறை முன்பு அமர்ந்து மாணவர்கள் தர்ணா
மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் அறை முன்பு அமர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்துக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் பள்ளிக்கூடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த மைதானத்தில் பள்ளிக்கூடத்தில் பிளஸ் -2 படிக்கும் மாணவர்கள் சிலர் கைப்பந்து விளையாடி வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் மாணவர்கள் யாரும் விளையாடதபடி மைதானத்தை பூட்டு போட்டுவிட்டதாக கூறி, நேற்று பள்ளிக்கூடம் முடிந்த பின்பு பிளஸ்-2 மாணவர்கள் 13 பேர் தலைமை ஆசிரியர் அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, நாங்கள் தேசிய, மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளோம். தற்போது பள்ளிக்கூடத்தின் மைதானத்தை திறக்காததால் எங்களால் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பள்ளிக்கூட மைதானத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அதற்கு போலீசார் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story