புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா் பெட்டி
தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர் (படம்)
அம்மாபேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகரில் சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் மிதக்கிறது. இதனால் கழிவுநீர் செல்லாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடையில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இந்திரா நகர்.
புதர் மண்டிய விளையாட்டு மைதானம்
அம்மாபேட்டை ஒன்றியம் படவல்கால்வாய் ஊராட்சிக்கு உட்பட்ட விளையாட்டு மைதானம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ளது. இந்த மைதானம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் மட்டைப்பந்து தளம், கைப்பந்து மற்றும் கபடி தளம் கடந்த 2019- 20-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த தளத்தை இதுவரை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை. இதனால் அந்த விளையாட்டு மைதானம் புதர் மண்டி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விளையாட்டு மைதானத்தை சீரமைத்து இளைஞர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
விளையாட்டு வீரர்கள், அம்மாபேட்டை.
------
குவிந்து கிடக்கும் குப்பை
ஈரோடு ஈ.பி.பி.நகர் எம்.ஜி.ஆர். காலனியில் பெரும்பள்ளம் ஒடை அருகில் பலர் குப்பைகளை கொட்டிவிட்டு சென்று விடுகிறார்கள். இதனால் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் பல நாட்களாக குப்பைகள் கிடப்பதால் அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். காற்று அடிக்கும் நேரம் காற்றில் பறந்து வீட்டிற்குள் வந்து விடுகிறது. எனவே இந்த குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
-------
வேகத்தடையில் வெள்ளை நிற கோடு
வெள்ளோடு- சென்னிமலை செல்லும் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தின் முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் வேகத்தடையில் பூசப்பட்ட பிரதிபலிக்கும் வெள்ளை நிற பெயிண்டு அழிந்துவிட்டது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு வேகத்தடை இருப்பது ெதரியவில்லை. இதன்காரணமாக அந்த வழியாக வரும் வாகனங்கள், வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி விடுகிறது. எனவே பள்ளிக்கூட மாணவ- மாணவிகளின் நலன் கருதி வேகத்தடையில் வெள்ளை நிற கோடு பெயிண்டு அடிக்க வேண்டும்.
மாணவ- மாணவிகள், வெள்ளோடு.
------
உயர் கோபுர மின் விளக்கு ஒளிருமா?
புஞ்சைபுளியம்பட்டி ராமநாதபுரத்தில் நால்ரோடு சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் போடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் நாலாபுறமும் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. ஓரிரு மாதங்கள்தான் இந்த மின் விளக்குகள் ஒளிர்ந்தன. பின்னர் பழுதாகி விட்டன. இதைத்தொடர்ந்து இந்த மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருளாக உள்ளது. எனவே அந்த பகுதியில் மின் விளக்குகள் எரிய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி.
----
குப்பையை அள்ள வேண்டும்
ஈரோடு மரப்பாரம் அண்ணாமலை தெருவில் பாதாள சாக்கடை அமைக்க குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் குழிகள் முறையாக மூடப்படவில்லை. இதனால் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியவில்லை. மேலும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பையை அள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மரப்பாலம்.
Related Tags :
Next Story