தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
பொள்ளாச்சி பழைய, புதிய பஸ் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பழைய பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதிகளில் நடைபாதையை மறைத்து கடைகள் அமைத்து உள்ளனர். இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, பொள்ளாச்சி.
போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இதற்கிடையில் பாரதி நகரில் இருந்து வந்து கரியகாளியம்மன் கோவில் பகுதியில் நியூஸ்கீம் ரோட்டிற்கு திரும்பும் இடத்தில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே போலீசார் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, மகாலிங்கபுரம்.
மீண்டும் பஸ் இயக்க வேண்டும்
கோவை காந்திபுரத்தில் இருந்து கோவைபுதூர் பிரஸ் என்கிளேவ் பகுதிக்கு முன்பு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.பாதாள சாக்கடை திட்ட பணிகள் காரணமாக சாலை பழுதானதால் இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பாதாள சாக்கடை பணிகள் முடிந்து சாலைகள் போடப்பட்டு உள்ளதால் மீண்டும் இந்த பகுதிக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும்.
சுந்தரமூர்த்தி, கோவைப்புதூர்.
சுகாதார சீர்கேடு
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் பாலக்காடு ரோட்டில் உள்ளது. இங்கு இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்செந்தூர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், பஸ்நிலையம் நுழைவுவாயில் பகுதியில் பலர் சிறுநீர் கழிக்கின்றன. இதனால், சுகாதார கேடு ஏற்படுவதுடன், பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு பஸ் நிலையத்திற்குள் செல்லும் அவல நிலை தொடர்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வுகாண நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபால், பொள்ளாச்சி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை நீலிக்கோணாம்பாளையம் அருகே உள்ள பச்சாபாளையம் தோட்டம் பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குப்பைகள் காற்றில் பறந்து 2 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மீது படுகிறது. இதனால் அவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற ஆவன செய்ய வேண்டும்.
ரமேஷ், பச்சாபாளையம்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
கோத்தகிரி அருகே பள்ளியாடா மற்றும் குட்டிமணி காலனி பகுதியில் ஏராளமான ஆடு, மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த கால்நடைகள் புலி ஒன்று தாக்கி கொன்று வருகிறது. மேலும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
பாலன், பள்ளியாடா.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கோவை ராதநாதபுரம் 50 அடி சாலையில் மணிமணல் மார்க்கெட் எதிரில் குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. மேலும், அந்தப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வால் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதோடு, சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
ஜெயலட்சுமி, ராமநாதபுரம்.
குப்பைத்தொட்டி வேண்டும்
கோவை தடாகம் ரோட்டில் சிவாஜி காலனி 2-ம் வீதியில் குப்பைத் தொட்டி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் குப்பைகளை சாலையோரங் களில் கொட்டுகின்றனர். இதனால் தற்போது அங்கு குப்பை மலை போல குவிந்து காட்சி அளிக்கிறது. இதனால் சாலைகளில் நடந்து செல்பவர்கள் மூக்கை பிடித்து செல்லும் அவல நிலை காணப்படுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதோடு, குப்பைத் தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காளிரஞ்சித், கோவை.
பஸ் இயக்க வேண்டும்
கூடலூரில் இருந்து மாலை 5.40 மணிக்கு பாட்டவயல் வழியாக அய்யன் கொல்லிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மாலை நேரத்தில் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் கூடலூர் வரும் பொதுமக்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் வெகு நேரம் காத்துக் கிடக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. இதேபோல் பள்ளிக்கூட மாணவ மாணவிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அரசு பஸ்களை முறையாக இயக்க வேண்டும்.
கந்தன், கூடலூர்.
பாலத்தில் ஓட்டை
பந்தலூர் தாலுக்கா எருமாடு அருகே அரசுமேல்நிலைப்பள்ளியின் பின்புறம் ஓனிமூலா கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் உள்ளனர். இஙகு செல்ல கான்கிரீட் சாலை உள்ளது. அந்த சாலையில் ஒரு பாலம் உள்ளது. அந்த பாலத்தில் ஓட்டை விழுந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு பாலத்தில் ஏற்பட்டு உள்ள ஓட்டையை சரிசெய்ய வேண்டும்.
கண்ணதாசன், எருமாடு.
தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
கோவை போத்தனூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகனங்கள் அனைத்தும் தாறுமாறாக செல்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் நடந்து செல்பவர்கள் சாலையை கடக்க அச்சப்பட்டு வருகிறார்கள். எனவே விபத்துகளை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாஜ், போத்தனூர்.
Related Tags :
Next Story