ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம்
கோபி அருகே ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து இறந்தவர் உடலை மயானத்துக்கு பொதுமக்கள் சுமந்து செல்கிறார்கள்.
கோபி அருகே ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து இறந்தவர் உடலை மயானத்துக்கு பொதுமக்கள் சுமந்து செல்கிறார்கள்.
மயானம்
கோபி அருகே உள்ள சாணார்பதி கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மயானத்துக்கு செல்ல அதே பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடை மேல் சுமார் 4 அடி உயரத்துக்கு தரைப்பாலம் கட்டப்பட்டு இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு உயரமான புதிய பாலம் கட்டி தருவதாக அப்போதைய எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து உடனடியாக பழைய பாலம் இடிக்கப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் இதுவரை பாலம் கட்டுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதனால் சாணார்பதியில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களது உடலை சுமந்து கொண்டு, கீரிப்பள்ளம் ஓடையில் சாக்கடை நீரில் இறங்கியே மயானத்துக்கு சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.
தற்காலிக பாலம் அமைப்பு
இந்த நிலையில் சாணார்பதியை சேர்ந்த பாரியூர் கோவில் பூசாரி சிவசுப்பிரமணியத்தின் மனைவி மரகதமணி என்பவர் வயது முதிர்வு காரணமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் சுமந்து கொண்டு கீரிப்பள்ளம் ஓடையில் இறங்கி மயானத்துக்கு சென்று கொண்டிருந்த னர். அப்போது ஓடையில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்க முடிவு செய்தனர். இதற்காக கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து ரூ.20 ஆயிரம் வசூல் செய்தனர். அதன்பின்னர் ஓடையின் குறுக்கே மூங்கில் மற்றும் பலகையால் தற்காலிக பாலம் அமைத்து மரதகதமணியின் உடலை மயானத்திற்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.
தானமாக வழங்கப்பட்டது
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் கூறும்போது, ‘இந்த பகுதியில் பாரியூர் கோவில் பூசாரிகள் குடும்பத்தினர் உள்பட 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்களுக்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்த நிலக்கிழார் ஒருவர் மயானத்திற்கு என 76 சென்ட் இடத்தை தானமாக கொடுத்தார்.
கோவில் பூசாரிகள் அனைவரும் சிவ தீட்சை பெற்றவர்கள் என்பதால் அவர்கள் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் குழியில் உட்கார்ந்த நிலையிலேயே அடக்கம் செய்வார்கள். அதனாலேயே இந்த மயான நிலத்தை தானமாக கொடுத்தனர்.
உயர்மட்ட பாலம் வேண்டும்
தண்ணீர் குறைவாக உள்ள காலங்களில் ஓடைக்குள் இறங்கியே சடலத்தை எடுத்து செல்வோம். தற்போது ஓடையில் அதிக அளவில் தண்ணீர் செல்வதாலும், தடப்பள்ளி வாய்க்காலிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு முறையும் இதே போன்று தற்காலிக பாலம் அமைத்தே மயானத்திற்கு சென்று வருகிறோம். உடனே மயானத்துக்கு செல்ல எங்களுக்கு நிரந்தரமாக உயர்மட்ட பாலம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story