அதிக பாரம் ஏற்றி சென்றதாக கூறி 20 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்

சென்னிமலை அருகே அதிக பாரம் ஏற்றி சென்றதாக கூறி 20 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னிமலை அருகே அதிக பாரம் ஏற்றி சென்றதாக கூறி 20 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதிக பாரம் ஏற்றிய லாரிகள்
சென்னிமலை அருகே பனியம்பள்ளி ஊராட்சி பகுதியில் கல்குவாரிகள் அதிகமாக உள்ளன.. இந்த குவாரிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் ஜல்லி கற்கள் மற்றும் கற்களை ஏற்றிக்கொண்டு ஈங்கூர் ஊராட்சிக்கு உள்பட்ட புலவனூர் வழியாக பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறது.
இந்த லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வதால் சாலைகள் பழுதடைந்து வருவதாக புலவனூர் பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கனிம வளத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருக்கு புகார் தெரிவித்து வந்தனர். மேலும் பல முறை இந்த வழியாக சென்ற டிப்பர் லாரிகளை சிறைபிடித்து பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுவித்து வந்தனர்.
சிறைபிடித்த பொதுமக்கள்
அதேபோல் நேற்று காலை 10 மணி அளவில் புலவனூர் வழியாக 20-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று கொண்டு இருந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் திரண்டனர். அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்வதாக கூறி லாரிகளை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இந்த லாரிகள் ரோட்டோரம் வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை தாசில்தார் கார்த்தி, கனிம வளத்துறை அதிகாரி சிலம்பரசன், சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், பனியம்பள்ளி முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார், ஈங்கூர் ஊராட்சி தலைவர் ஈஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது அவர்களிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘புலவனூர் வழியாக டிப்பர் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி அதிவேகமாக செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் தார் சாலை பழுதடைந்து வருவதுடன் ரோடு முழுக்க புழுதி மயமாக இருக்கிறது. இதன் காரணமாக எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்’. என்றனர்.
அதற்கு அதிகாரிகள், ‘உங்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சிறைபிடித்த லாரிகளை விடுவித்து மதியம் 2 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த வழியாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story






