கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்; எச்.ராஜா உள்பட 500 பேர் கைது
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.ராஜா உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடவள்ளி,டிச.23-
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.ராஜா உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜை கண்டித்தும், கேரளாவில் பா.ஜனதா நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு இந்து முன்னணி மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா கூறியதாவது:-
மன்னிப்பு கேட்க வேண்டும்
பெண் உரிமை என்ற பெயரில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுப.வீரபாண்டியன் கலந்தாய்வு கூட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. ‘மனதார கருப்பு சட்டை போட்டு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன்’ என்று பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் கூறியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். அதன்பிறகு தி.க.வுடன் இணைந்து கருப்பு சட்டை அணிந்து கொண்டு செல்லலாம்.
ஆனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இதுபோன்று தி.க. அமைப்பினர் மற்றும் ஒரு சார்பாக கூட்டம் நடத்துவது மதவெறியை தூண்டுவதாக உள்ளது. இதுபோன்று நடைபெற்றால் இந்து அமைப்புகள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கவர்னரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் நந்தகுமார், இந்துமுன்னணி கோட்ட செயலாளர் சதீஷ், மாவட்ட தலைவர் தசரதன், கிருஷ்ணன், சி.தனபால், விஷ்ணு ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
500 பேர் கைது
ஆர்ப்பாட்டத்தையொட்டி பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எச்.ராஜா உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டு, வடவள்ளி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
துணைவேந்தர் விளக்கம்
இதற்கிடையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் குறித்து துணைவேந்தர் காளிராஜ் விளக்கம் அளித்து கூறியதாவது:-
பல்கலைக்கழகத்தில் கடந்த 17-ந் தேதி சமூக பணித்துறை சார்பாக பெண்கள் உரிமை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சுப.வீரபாண்டியன் மற்றும் ஓவியா கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் அவர்கள் பெண்ணுரிமை பற்றி மட்டும்தான் பேசினார்கள். பெரியார், பாரதியார் ஆகியோர் எப்படி பெண்ணுரிமைக்காக பாடுபட்டார்கள் என்று பேசினார்கள். கல்லூரியில் மத தூண்டுதல் குறித்தோ, அரசியல் மற்றும் அமைப்புகளையோ இழிவாக பேசவில்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்து பேசி அங்கே என்ன நடந்தது என்பதை முழுமையாக ஆலோசிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story