ஆட்சேபனை மனுக்களை பரிசீலித்து வார்டு மறுவரையறை செய்ய நடவடிக்கை


ஆட்சேபனை மனுக்களை பரிசீலித்து வார்டு மறுவரையறை செய்ய நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2021 8:40 PM IST (Updated: 22 Dec 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

ஆட்சேபனை மனுக்களை பரிசீலித்து வார்டு மறுவரையறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணைய தலைவர் பழனிக்குமார் தெரிவித்தார்.

கோவை

ஆட்சேபனை மனுக்களை பரிசீலித்து வார்டு மறுவரையறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணைய தலைவர் பழனிக்குமார் தெரிவித்தார்.

கருத்து கேட்பு கூட்டம்

கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சிகளின் வார்டு மறுவரையறை தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கோவை கலெக்டர் சமீரன், திருப்பூர் கலெக்டர் வினீத், சேலம் கலெக்டர் கார்மேகம், மறுவரையறை ஆணைய செயலாளர் சுந்தரவல்லி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

காரமடை

லோகநாதன்(கூடலூர் நகராட்சி):-
பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தினால் பொது மக்களுக்கு என்ன பயன் என்று பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. நகராட்சியுடன் இணைத்தால் வரி அதிகமாக வரும் என்று பயப்படுகின்றனர். இதனால் நாயக்கன்பாளையம் ஊராட்சி மக்கள் எங்களை கூடலூர் நகராட்சியில் சேர்க்கக்கூடாது என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். எனவே நகராட்சியாக தரம் உயர்த்தினால் என்ன பயன் என்று பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

ஹேமா(கூடலூர்):-
1-வது வார்டில் உள்ள நேரு நகர், தமிழ் நகரை 2-வது வார்டிலும், 3-வது வார்டில் உள்ள அன்பு நகரை 1-வது வார்டிலும், 3-வது வார்டில் உள்ள அம்மன் நகர், ஜனனி காலனியை 2-வது வார்டிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீஜா(காரமடை நகராட்சி):-

16-வது வார்டில் உள்ள அம்பேத்கர் நகரை 17-வது வார்டுடனும், 17-வது வார்டு குளத்துபாளையத்தை 16-வது வார்டுடனும் இணைக்க வேண்டும்.

மதுக்கரை நகராட்சி

பால் கணேசன்(கருமத்தம்பட்டி நகராட்சி):-
மைக்கேல்பாளையம் என்ற பகுதி அரிஜன காலனி என்றும், மைக்கேல்பாளையம் என்றும் 2 வார்டுகளில் இடம் பெற்றுள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.

பூபதி(கருமத்தம்பட்டி நகராட்சி):-
ஒரு வார்டை சேர்ந்த சிலருக்கு வேறு வார்டுகளில் ஓட்டு இருக்கிறது. 30 ஆண்டுகளாக உள்ள இந்த குழப்பத்திற்கு தீர்வு காண ஒவ்வொரு வார்டிலும் வீடு வாரியாக புதிதாக கதவு எண் கொடுக்க வேண்டும்.

ராமு(மதுக்கரை நகராட்சி):-
450 வீடுகள் இருந்தால் ஒரு வார்டு என்ற அடிப்படையிலும், வரி விகிதம் அடிப்படையிலும் வார்டு பிரிக்கப்படுவதால் மதுக்கரை நகராட்சியில் ஒருசில வார்டுகளில் வெறும் 250 வாக்காளர்களும், ஒரு சில வார்டுகளில் 2,500 வாக்காளர்களும் வருகின்றனர். எனவே வரி விகிதம் அடிப்படையில் வார்டுகளாக பிரிக்காமல் வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பிரித்தால் சரியாக வரும்.

பரிசீலனை செய்து நடவடிக்கை
அதன்பிறகு தமிழக மறுவரையறை ஆணைய தலைவர் பழனிசாமி பேசியதாவது:-
கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர் மற்றும் மதுக்கரை, திருப்பூர் மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி, சேலம் மாவட்டத்தில் தாராமங்கலம், இடங்கணசாலை ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டு மறுவரையறை தொடர்பான முன்மொழிகள் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. 

இன்றயை(நேற்று) கூட்டத்தில் வார்டு மறுவரையறை செய்வது தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள், ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கை மனுக்கள் குறித்து முறையாக பரிசீலனை செய்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு வார்டு மறுவரையறை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story