புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x
தினத்தந்தி 22 Dec 2021 9:01 PM IST (Updated: 22 Dec 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா் பெட்டி

புகார் பெட்டி

முட்புதர்களை அகற்ற வேண்டும்(படம்)

அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் கெட்டிசமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரை பகுதியில் வாகனங்கள் செல்லும்போது பாதுகாப்புக்காக தடுப்பு சுவர் அமைத்துள்ளனர். தற்போது அந்த தடுப்பு சுவரை சுற்றி முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் தடுப்புச்சுவர் இருப்பதே தெரியவில்லை. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி தடுப்புச்சுவரை சுற்றி வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, அந்தியூர்.

  
சாலை அகலப்படுத்தப்படுமா?

  மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது 46 புதூர் ஊராட்சி. இங்குள்ள முனியப்பன் கோவிலில் இருந்து பெரிய செட்டிபாளையம் வழியாக செங்கோட்டையா கல்யாண மண்டபம் வரையிலான ரோடு குறுகலாக உள்ளது. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே ரோட்டை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ஊர் பொதுமக்கள், பெரிய செட்டிபாளையம்.
  
வேகத்தடை அமைக்க வேண்டும்

  சென்னம்பட்டி கிராமம் சனி சந்தை என்ற இடத்தில் 3 ரோடு உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் கூடும் இந்த ரோட்டில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. உடனே இந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், சனி சந்தை.
  
வாய்க்கால் சீரமைக்கப்படுமா?

  ஈரோடு திண்டல் வித்யா நகரில் இருந்து தெற்கு பள்ளம் செல்லும் வழியில் கீழ்பவானி பாசன வாய்க்கால் உள்ளது. இங்குள்ள திருமலை நகர், கார்கில் நகர், சண்முகபுரம், டி.ஆர். கார்டன் உள்ளிட்ட பகுதிகளை ஒட்டி இந்த பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. வாய்க்காலின் இரு கரைகளிலும் புதர்மண்டி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. வாய்க்காலின் உள்பகுதியிலும் செடி கொடிகள் வளர்ந்து தண்ணீர் பாய்ந்து செல்ல தடை ஏற்படும் வகையில் உள்ளது. குறிப்பாக சமீபத்தில் பெய்த மழையின்போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் அடித்து வரப்பட்ட மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. அதுமட்டுமின்றி அந்த பகுதிகளில் கட்டுமான இடிபாடு கழிவுகளை வாய்க்காலை ஒட்டி கொட்டுவதால் வாய்க்கால் தூர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வித்யா நகர் பகுதியை ஒட்டி ஓடுகின்ற பாசன வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், வித்யா நகர்.
  
தபால் பெட்டியில் குருவிக்கூடு

  அந்தியூர் எண்ணமங்கலம் அருகே செல்லம்பாளையத்தில் உள்ள மளிகை கடை முன்பு தபால் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதில் அக்கிராம மக்கள் தபால்களை போட்டு வந்தனர். ஆனால் கடந்த பல மாதங்களாக தபால் பெட்டியை திறந்து தபால்கள் எடுக்கப்படாமலே உள்ளது. இதனால் தபால்கள் பெட்டிக்குள்ளேயே குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக தபால் பெட்டிக்குள் சிட்டு்க்குருவிகள் கூடு கட்டி வசித்து வருகின்றன. உடனே தபால் பெட்டியை தினமும் திறந்து தபால்களை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  சந்திரன், அந்தியூர்.
  
அரசு ஆஸ்பத்திரி கழிப்பிடம் சீராகுமா?

  ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து பிணவறைக்கு செல்லும் வழியில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. தண்ணீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது. கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவசரத்துக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆஸ்பத்திரியில் உள்ள இந்த கழிவறையால் புதிய நோய்கள் தொற்றும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும்.
  ஐ.குமார், ஈரோடு.
  
  
பாராட்டு

  ஈரோடு சூளை எம்.ஜி.ஆர்.நகரில் ரோட்டு ஓரத்தில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றிவிட்டனர். எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
  இளங்கோ, ஈரோடு.


Next Story