ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
கோவை வடவள்ளி மருதமலை சாலையில் வடவள்ளி மில் சகாயம் மளிகை கடை அருகில் பிளாட்பாரத்தில் தனியார் கடை ஒன்றின் இரும்பு படிக்கட்டுகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிக்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுந்தர்ராஜ், வடவள்ளி.
பல்லாங்குழி சாலை
கோவை போத்தனூரில்இருந்து செல்லும் செட்டிபாளையம் சாலை மிகவும் கரடு முரடாக, குண்டும் குழியுமாக உள்ளது. சரக்கு வாகனம் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்லும் இந்த சாலையால் பொதுமக்கள் அவதி படுகிறார்கள். புதிய சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆஸ்பத்திரியில் குப்பைகள்
| பொள்ளாச்சி-உடுமலை மெயின் ரோட்டில் கோலார்பட்டியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு, கோலார்பட்டி மற்றும் அதன் அருகில் உள்ள கிராம மக்கள் காய்ச்சல், தலைவலி, காயம் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது ஆஸ்பத்திரி முன்புறம் உள்ள சுற்றுசுவர் முன்பு குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடுகள் மற்றும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். |
தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
| கோவை போத்தனூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகனங்கள் அனைத்தும் தாறுமாறாக செல்கிறது. குறிப்பாக சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள டிவைடரை கண்டுகொள்ளாலம் வாகன ஓட்டிகள் செல்கிறார்கள். இதனால் அடிக்கடி அங்கு வாகன விபத்துகள் நடக்கிறது. மேலும் பொதுமக்களும் சாலையை கடக்க முடியாமல் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அஙகு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகன விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். |
துருப்பிடித்த புகார் பெட்டி
| பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளில் குறைகளை தீர்க்கும் வகையில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளது. இதில் நோயாளிகள் தங்களின் குறைகளை புகார்களாக பதிவு செய்து எழுதி போட்டனர். தற்போது அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ பிரிவு முன் உள்ள புகார் பெட்டி திறக்கப்படாமல் உள்ளது. மேலும் அந்த புகார் பெட்டின் பூட்டு துருப்பிடித்து உள்ளது. எனவே புகார் பெட்டியை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். |
காட்சி பொருளான நீர்வீழ்ச்சி
| கோவை வ.உ.சி. பூங்கா அருகே ரவுண்டானாவில் நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டு இருந்தது. இரவு நேரங்களில் வண்ண வண்ண மின்னொளியில் இந்த நீர்வீழ்ச்சியானது திகழ்ந்து வந்தது. அப்போது அங்கு வரும் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தாக இருந்தது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த நீர்வீழ்ச்சியானது காட்சி பொருளாகவே உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். |
மூடிக்கிடக்கும் கழிப்பிடம்
| கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் காந்திநகர் பகுதியில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இது பல நாட்களாக மூடியே கிடப்பதால் யாருக்கும் உபயோகம் இல்லாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த முதியவர்கள், பெண்கள் உள்பட பலர் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மூடிக்கிடக்கும் இந்த கழிப்பிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். |
மணலால் விபத்து அபாயம்
| கோவை அவினாசி ரோட்டில் உள்ள லட்சுமி மில் சந்திப்பு சிறுவர் சீர்த்திருத்த பள்ளி அருகே சாலையில் மணல் அதிகமாக குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அங்கு விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையில் குவிந்துள்ள அந்த மணலை அகற்ற வேண்டும். |
ஒளிராத தெருவிளக்கு
| கோவை நீலிக்கோணம்பாளையம் ரெயில்வே கேட் அருகே உள்ள தெருவிளக்கு கடந்த ஒரு மாதமாக ஒளிரவில்லை. இதனால் இந்த வழியாக இரவில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இரவில் அங்கு இருள் சூழ்ந்து இருப்பதால் குற்றசம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த விளக்கை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும். |
கழிவுநீரால் துர்நாற்றம்
| பொள்ளாச்சி அகே உள்ள பொங்காளியூர் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி முடியவில்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த பணியை விரைவில் முடிப்பதுடன், தற்காலிகமாக சாக்கடை கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். |