பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ உள்பட 40 பேர் மீது வழக்கு


பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ உள்பட 40 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Dec 2021 10:19 PM IST (Updated: 22 Dec 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ உள்பட 40 பேர் மீது வழக்கு

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மோதல் தொடர்பாக பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. உள்பட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள். 

தி.மு.க., அ.தி.மு.க.வினர் மோதல்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளம் பி.ஏ.பி. வாய்க்கால் உபரிநீர் மூலம் நிரம்பி மறுகால் விழுந்து சென்றது. இதனால் நேற்று முன்தினம் குளம் அருகே உள்ள அம்மன் கோவிலில் பொதுமக்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், குளத்தை பார்வையிடவும் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து குளம் அருகில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் திரண்டனர். அப்போது தி.மு.க., அ.தி.முக.வினரிடையே இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு மோதல் நடந்தது. 

இந்த மோதலின் போது பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.வை நோக்கி மர்ம நபர் ஒருவர் செருப்பை எடுத்து வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசில் புகார் 

இந்தநிலையில் நேற்று குருநெல்லிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், கடந்த 20-ந் தேதி இரவு கோதவாடி குளம் தண்ணீர் வரத்தினால் நிரம்பி உள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் பொள்ளாச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 40 நபர்கள் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் சாமியானா பந்தல் மற்றும் இருக்கை அமைத்து பொங்கல் விழா ஏற்பாடு செய்துள்ளார்கள். 

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்தும், சட்டவிரோதமாக ஒன்றுகூடியதோடு என்னை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். மேலும் என்னை இங்கிருந்து சென்று விடுங்கள் இல்லாவிட்டால் உங்களை கொல்லாமல் விட மாட்டோம் என கொலை மிரட்டலும்  விடுத்தனர். அதனால் அ.தி.மு.க.வினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.  

40 பேர் மீது வழக்கு

இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசார், பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., உள்பட  40 பேர் மீது பொது இடத்தில் அனுமதியின்றி கூட்டமாக கூடியது, அனுமதியின்றி விழா நடத்தியது, அரசு அலுவலர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல், கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியது. 

அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story