பாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு: விடுதி சமையல் அறைக்கு ‘சீல்’

பாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு காரணமாக விடுதி சமையல் அறைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரம் ஜமீன் கொரட்டூர் பகுதியில் செயல்படாமல் உள்ள கப்பல் கட்டும் தனியார் கல்லூரி விடுதி மற்றும் ஒரு சில இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஜமீன்கொரட்டூர் பகுதி கல்லூரி விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்களுக்கு கடந்த 15-ந்தேதி வழங்கப்பட்ட தரமற்ற உணவு காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரமற்ற உணவு வழங்கப்பட்ட உணவு விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற உணவால் அத்தகைய நிலை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று பெண் ஊழியர்கள் தங்கியிருந்த கல்லூரி விடுதியின் சமையலறைக்கு திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
தரமற்ற உணவு சமைத்த சமையலாளர் சக்தி, கிச்சன் உரிமையாளர் மற்றும் அனுமதியின்றி கல்லூரி வளாகத்தில் தொழிலாளர்களுக்கு தங்க வைக்க அனுமதி அளித்த கல்லூரியின் உரிமையாளர் என மொத்தம் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அவர்களில் சக்தி கிச்சன் மேற்பார்வையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






