பயிர்கடன் தள்ளுபடி தேதியை நீட்டிக்க வலியுறுத்தி சப்கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பயிர்கடன் தள்ளுபடி தேதியை நீட்டிக்க வலியுறுத்தி சப்கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
பொள்ளாச்சி
பயிர்கடன் தள்ளுபடி தேதியை நீட்டிக்க வலியுறுத்தி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் தள்ளுப்படி தேதியை நீட்டிக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சப்-கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நிறுவனர் ஈசன் முருகசாமி, கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முற்றுகை போராட்டம் முடிந்ததும் விவசாயிகள் தனி, தனியாக சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதிய அரசாணை
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் காலகாலமாக பயிர் கடன் பெற்று உரிய நேரத்தில் புதுப்பித்து வந்தோம். கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தவணை தேதி நெருங்கியதால் புதுப்பிக்க கூட்டுறவு சங்க செயலாளர்கள் வற்புறுத்தல் மற்றும் நெருக்கடி கொடுத்ததால் சிரமப்பட்டனர். அந்த நெருக்கடி காரணமாக வெளி நபர்களிடம் கடன் வாங்கி விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். கடந்த ஆண்டு மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் புதுப்பிக்க பணம் செலுத்திய விவசாயிகளுக்கு செயலாளர்களின் கவனக்குறைவால் காலதாமதமாக கடன் புதுப்பித்து, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வரவு வைக்கப்பட்டது.
இதனால் கூட்டுறவு சங்கத்தையே நம்பி இருந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுப்படி அரசாணையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி என்று இருந்ததால் தள்ளுப்படி சலுகை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கனமழையால் பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு பயிர் கடன் தேதியை கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி என நீட்டிப்பு செய்து புதிய அரசாணை வெளியிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story






