ரெயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு தடை


ரெயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு தடை
x
தினத்தந்தி 23 Dec 2021 9:05 PM IST (Updated: 23 Dec 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு தடை

பொள்ளாச்சி

மழைநீர் தேங்கி நிற்பதாலும், கான்கிரீட் தளம் சேதமடைந்து காணப்படுவதால் மாக்கினாம்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டியில் இருந்து சோலபாளையம் செல்லும் சாலையின் குறுக்கே திண்டுக்கல் அகலரெயில் பாதை செல்கிறது. இதன் காரணமாக மோட்டார் சைக்கிள்கள், கார், ஆட்டோ மற்றும் சிறிய அளவிலான சரக்கு வாகனங்கள் செல்லும் வலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுரங்கபாதையை சோலபாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கொள்ளுப்பாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரை ஊராட்சி மூலம் மோட்டார் வைத்து அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்யவில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருப்பினும் சுரங்கப்பாதையில் மழைநீர் வடியவில்லை. இதற்கிடையில் சுரங்கப்பாதையில் கான்கிரீட் ஓடுதளம் சேதமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சுரங்கப்பாதையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பொதுமக்கள் அவதி

மாக்கினாம்பட்டியில் இருந்து சோலபாளையம் செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. தற்போது மழை பெய்யாத சூழ்நிலையில் தோட்டங்களில் இருந்து வரும் நீர் சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கிறது. இதனால் தொடர்ந்து தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் சுரங்கப்பாதையின் கான்கிரீட் தளம் சேதமடைந்து இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. சுரங்கப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வாகனம் சிக்கி கொண்டது.
இதன் காரணமாக வாகனங்கள் செல்ல தடை விதித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாக்கினாம்பட்டியில் இருந்து சோலபாளையம் செல்வதற்கு சுமார் 5 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கடும் சிரமப்படுகின்றனர். பொள்ளாச்சி பகுதியில் உள்ள சுரங்கப்பாதைகள் அனைத்தும் சரியான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடைப்படுகிறது. 
எனவே ரெயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த கான்கிரீட் தளத்தை சீரமைக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
1 More update

Next Story