விவசாயிகளுக்கு 20580 மரக்கன்றுகள்


விவசாயிகளுக்கு 20580 மரக்கன்றுகள்
x
தினத்தந்தி 23 Dec 2021 9:05 PM IST (Updated: 23 Dec 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு 20580 மரக்கன்றுகள்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் இந்த ஆண்டில் விவசாயிகளுக்கு 20,580 மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரக்கன்றுகள் இலவசம்

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 30 வருவாய் கிராமங்களிலும் இந்த நடப்பு ஆண்டிற்கு 20,580 மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இதில் வரப்பு ஓரங்களில் மரப்பயிர் நடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 50 மரங்கள் வழங்கப்படும். தனி பயிராக மரங்களை நடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 160 மரக்கன்றுகள் வழங்கப்படும். வேம்பு, நாவல், பெருநெல்லி, குமிழ், புளியமரம், தேக்கு, மலைவேம்பு, மகாகனி போன்ற தரமான நாற்றுக்கள் கோவை மாவட்டத்தில் உள்ள வனத்துறையின் வசம் உள்ள நாற்றங்கால்களில் இருந்து பெற்று வழங்கப்படும்.

ஊக்கத்தொகை

இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய விவசாயிகள் உழவன் செயலியில் தங்களது ஆவணங்களில் உள்ள விவரங்கள் அனைத்தையும் (சிட்டா, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல்) பதிவு செய்ய வேண்டும். உழவன் செயலி இல்லாத விவசாயிகள் பொள்ளாச்சி தெற்கு வேளாண்மை விரிவாக்க மையத்திலும் பதிவு செய்யலாம்.
மேலும் மரக்கன்றுகள் பராமரிக்க 2-ம் ஆண்டு முதல் 4 ஆண்டு வரை மரக்கன்றுகளை பராமரித்திட விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக மரக்கன்று ஒன்றிற்கு ரூ.7 வழங்கப்படும். மேலும் இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு கோலார்பட்டி, தொண்டாமுத்தூர், கோமங்கலம்புதூர், சமத்தூர், அம்பராம்பாளையம் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் தெற்கு ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குனர் நாகபசுபதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 More update

Next Story