வீடு, வீடாக சென்று பா.ம.க.வின் கொள்கைகளை பிரசாரம் செய்யுங்கள்: டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்


வீடு, வீடாக சென்று பா.ம.க.வின் கொள்கைகளை பிரசாரம் செய்யுங்கள்: டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 27 Dec 2021 6:45 PM IST (Updated: 27 Dec 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

வீடு, வீடாக சென்று பா.ம.க.வின் கொள்கைகளை பிரசாரம் செய்யுங்கள் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

காஞ்சீபுரம் செவிலிமேடு பகுதியில் பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கட்சியின் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மத்திய ரெயில்வே துறையின் முன்னாள் இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி, கட்சி தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளாக தொண்டர்களை சந்திக்க முடியாமல் வேதனைப்பட்டு கொண்டிருந்தேன். தற்போது கொரோனா வந்தாலும் பரவாயில்லை. இனிமேல் தொண்டர்களை ஒவ்வொரு மாவட்டமாக சென்று சந்திக்க முடிவு செய்துள்ளேன்.

இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்-அமைச்சர்களில் இதுவரை யாரும் வன்னியர்கள் இல்லை. நீதிபதிகளாகவும், அரசு பதவிகளிலும் இருப்பவர்களில் கூட வன்னியர்கள் அதிகமாக இல்லை. இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஏழ்மை நிலையில் உள்ளனர்

வன்னியர்கள் இன்றும் ஏழ்மை நிலையில்தான் உள்ளனர். பெரும்பான்மை சமுதாயம் நாட்டை ஆள வேண்டும், சிறுபான்மை சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே ஜனநாயகம். வன்னியர் சமுதாய மக்கள் மாறி, மாறி பல்வேறு கட்சியினருக்கு வாக்களிப்பதால்தான் பெரும்பான்மையான சமூகமாக இருந்தும் நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை. பல கட்சிகளிலும் பிரிந்து கிடப்பவர்கள் ஒருமுறையாவது பா.ம.க.வுக்கு வாக்களித்தால் தான் நமது கட்சியின் பலம் பிறருக்கு தெரிய வரும். மற்ற சமுதாயத்தினர் அன்புமணி முதல்-அமைச்சராகி விட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

3-வது பெரிய கட்சியாக இருந்தும் தொடர்ந்து 42 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தேர்தலில் பணம் தான் ஆளுகிறது என்றால் தேர்தலை எதற்கு நடத்த வேண்டும். காசு செலவழிக்காமல் தேர்தல் நடைபெற வேண்டும். வருகிற நகர்மன்ற தேர்தலிலாவது முழுமையாக பா.ம.க.வுக்கு வாக்களியுங்கள். முன்னேற்றத்தை நாங்கள் கொண்டு வருகிறோம்.

மது விலக்கு

பா.ம.க.வில் உள்ள இளைஞர்கள், தொண்டர்களின் சக்தி அளப்பரியது.

அவர்கள் வீடு, வீடாக சென்று மக்களிடம் பா.ம.க.வின் கொள்கைகளை, லட்சியங்களை, இதுவரை கடந்து வந்த பாதைகளை தெரியப்படுத்துங்கள். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழக்கில் கோர்ட்டு தவறான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து நாம் சுப்ரீம் கோர்ட்டை நாடியிருக்கிறோம். வரும் பிப்ரவரி மாதத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை ஒழிப்பதே முதல் கையெழுத்தாக இருக்கும் என அன்புமணி சொல்லி வருகிறார். மது இல்லாத தமிழகம் மலர பா.ம.க.வுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் பொன்.கங்காதரன், முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி பெ.கமலம்மாள், மாவட்ட தலைவர் உமாபதி, செவிலிமேடு செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story