‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 1 Jan 2022 10:04 PM IST (Updated: 1 Jan 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

காட்டுப்பன்றிகள் தொல்லை

கோத்தகிரி அருகே கக்குச்சி ஊராட்சி பில்லிகம்பை சக்தி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையோரத்தில் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் முறையாக குப்பைகள் அகற்றப்படுவது இல்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், காட்டுப்பன்றிகளின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே அங்கிருந்து குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும். 

மனோகரன், சக்திநகர்.

குட்டை தூர்வாரப்படுமா?

சூலூர் அருகே நீலாம்பூரில் உள்ள குட்டையில் தண்ணீர் மாசுபட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே குட்டையை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

விஜயகுமார், நீலாம்பூர். 

குண்டும், குழியுமான சாலை

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து கிளை நூலகத்திற்கு செல்லும் சாலையில் ஒருசில இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோரும், வாகனத்தில் செல்வோரும் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குருசாமி, கோத்தகிரி.

சுகாதார சீர்கேடு

சுல்தான்பேட்டை அருகே எஸ்.அய்யம்பாளையம் ஊராட்சியில் உள்ள குட்டை பகுதியில் இறந்த கறிக்கோழிகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வீசி செல்கின்றனர். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்திரன், மலைமந்திரிபாளையம்.

வாகனங்களை நிறுத்த இடவசதி?

கூடலூர்-ஊட்டி சாலையில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ராஜகோபாலபுரம் வரை ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அகலம் குறைந்த அந்த சாலையின் நடுவில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சிமெண்டு தடுப்புகளை வைத்து இருக்கின்றனர். இதனால் சாலை மேலும் அகலம் குறைந்து, இருசக்கர வாகனங்களை கூட நிறுத்துவதற்கு இடவசதி இல்லாமல் போய்விட்டது. எனவே வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவசங்கர், கூடலூர்.

போக்குவரத்துக்கு இடையூறு

கோவை நியூ சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் 5-க்கும் மேற்பட்ட ஆடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகேஷ்வரன், சித்தாபுதூர்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

சூலூரில் இருந்து அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல குறைந்த எண்ணிக்கையில்தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் நேரடியாக செல்ல பஸ் இன்றி மாறி மாறி செல்ல வேண்டி உள்ளது. எனவே கூடுதலாக அரசு டவுண் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடராஜன், சூலூர்.

சாலையில் சுற்றும் கால்நடைகள்

கோவை அருகே காருண்யா நகரில் இருந்து கோவை குற்றாலம் செல்லும் வழியில் சாடிவயல் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்தில் சிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே சாலையில் கால்நடைகளை திரியவிடும் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரன்வீர் வர்சன், காருண்யா நகர். 

குடிநீர் குழாயில் உடைப்பு

காரமடை அருகே தேக்கம்பட்டி ஊராட்சி கிட்டாம்பாளையம் பகுதியில் சேரன் நகர், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது. இதன் காரணமாக தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வணே்டும்.

ரித்தீஷ், காரமடை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோவை சாய்பாபா காலனி 6-வது வீதியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அவற்றை தெருநாய்கள் சாலை வரை சிதறடித்து விடுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணா, கோவை.



Next Story