அரசு பள்ளி மாணவர்கள் 22,800 பேருக்கு தடுப்பூசி


அரசு பள்ளி மாணவர்கள் 22,800 பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 1 Jan 2022 10:04 PM IST (Updated: 1 Jan 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக அரசு பள்ளி மாணவர்கள் 22,800 பேருக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கோவை

கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக அரசு பள்ளி மாணவர்கள் 22,800 பேருக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அச்சுறுத்தும் ஒமைக்ரான்

தென்னாப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையில் நாளை(திங்கட்கிழமை) முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் வருகிற 10-ந் தேதி முதல் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

22,800 சிறுவர்களுக்கு தடுப்பூசி

இது தவிர தமிழகத்தில் பள்ளிகளுக்கே சென்று சிறுவர்களுக்கு நேரடியாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் கோவையில் முதல் கட்டமாக 15 முதல் 18 வயது வரை உள்ள 22,800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 22,800 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். அந்தந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் நாளை(திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.

முன்பதிவு தொடங்கியது

அடுத்த கட்டமாக கோவை மாநகராட்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான முன்பதிவு இன்று(நேற்று) முதல் தொடங்கி உள்ளது. ஆன்லைன் மூலம் கோவின் என்ற செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். பள்ளி அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story