சார்-பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு
ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய சார்-பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
துடியலூர்
ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய சார்-பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வரதட்சணை
கோவை கவுண்டம்பாளையம் எஸ்.பி.எம். நகரை சேர்ந்தவர் வேளவேந்தன். இவருடைய மகள் சசிரேகா (வயது 26). இவர், துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும், எனது கணவர் நிதிஷ் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது எனக்கு 100 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி, ஒரு கார் மற்றும் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு கேட்டனர்.
அதன்படி திருமணத்திற்கு 100 பவுன் நகையும் போட்டனர். திருமணத்திற்கு பிறகான விருந்துக்கு ரூ.50 ஆயிரத்தை எனது கணவரின் மாமா தனமூர்த்தி என்பவர் வாங்கி சென்றார். ஆனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி செலவுகளை நாங்களே செய்தோம்.
மேலும் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மற்றும் காரின் சாவி ஆகிய அனைத்தையும் எனது கணவரின் பெற்றோர் வாங்கிக்கொண்டனர்.
கொடுமைப்படுத்தினர்
அதன்பிறகு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி வருமாறு என்னிடம் கூறி கட்டாயப்படுத்தினர். இதையடுத்து பணம் வாங்கி வரா விட்டால் வாழ்க்கையை இழக்க நேரிடும் என்று மிரட்டினர்.
மேலும் தொழில் தொடங்குவதற்கு ரூ.50 லட்சம் பணம், ஏற்கனவே கூறியபடி ரூ.1 கோடி மதிப்பிலான வீடு வாங்கி தர வேண்டும் என்று கேட்டு கொடுமைப்படுத்தினர். இல்லை என்றால் எனது கணவருக்கு வேறு திருமணம் செய்வதாக கூறி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் நிதிஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
6 பேர் மீது வழக்கு
அதன்பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய நிதீஷ், அவரின் தந்தை நாகேந்திரன், தாயார் லட்சுமி, சகோதரர் ஹரீஷ் மற்றும் கனவரின் சித்தப்பா சரவணன் ,கணவரின் மாமாவும், சார்பதிவாளருமான தன மூர்த்தி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story