ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 2 Jan 2022 10:23 PM IST (Updated: 2 Jan 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

அனுமன் ஜெயந்தியையொட்டி கோவையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவை

அனுமன் ஜெயந்தியையொட்டி கோவையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி

மார்கழி மாதத்தில் அமாவாசை, மூல நட்சத்திரம் இணைந்து இருக்கும் நாளில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நாளே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி கோவை பீளமேட்டில் உள்ள அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இங்கு ஆஞ்சநேயர் விஸ்வரூப மாருதியாக ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். அங்கு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அபிஷேகம்

ஆடீஸ் வீதியில் உள்ள மாங்காடு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன் மற்றும் அனுமன் என பஞ்சமுக ஆஞ்சநேயர் வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், மஞ்சள், விபூதி, சந்தனம் உள்பட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

ஒலம்பஸ் கணேசபுரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் மற்றும் தொப்பம்பட்டி ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் ராஜ  அலங்காரமும், ரேஸ்கோர்ஸ் 108 விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது.

கூட்டம் அதிகம்

பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டதால், ஆஞ்சநேயர் கோவில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

முன்னதாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.


Next Story