நண்பரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது


நண்பரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 2 Jan 2022 10:23 PM IST (Updated: 2 Jan 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

கோவையில், செல்போன் தவறியதால் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை

கோவையில், செல்போன் தவறியதால் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி

கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 45). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (41). தொழிலாளி.இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணக்குமாரின் வீட்டிற்கு ராஜ்குமார் சென்றார். 

அங்கு அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து ராஜ்குமார் தனது வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரது செல்போனை மறந்து, அங்கேயே வைத்துவிட்டு சென்றதாக தெரிகிறது.

கத்திக்குத்து

இதனால் மீண்டும் சரவணக்குமாரின் வீட்டுக்கு ராஜ்குமார் சென்றார். பின்னர் அவரிடம், தனது செல்போனை இங்கேயே வைத்து விட்டு சென்று விட்டேன், அதனை எடுத்து தரும்படி கேட்டார். அதற்கு அவர், செல்போன் எதுவும் இங்கு இல்லை, வேறு எங்காவது மறந்து வைத்து இருப்பாய் என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சரவணக்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராஜ்குமாரின் வயிறு மற்றும் மார்பு பகுதியில் குத்தினார். இதன் காரணமாக பலத்த காயம் அடைந்த ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார்.

கைது

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சாய்பாபாகாலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கத்தியால் குத்திய அவரது நண்பர் சரவணக்குமாரை கைது செய்தனர்.

1 More update

Next Story