10¾ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு


10¾ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
x
தினத்தந்தி 2 Jan 2022 10:23 PM IST (Updated: 2 Jan 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 78 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

கோவை

கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 78 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில் அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் தமிழக அரசு பரிசு தொகுப்பை அறிவித்து உள்ளது. 

அதில் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

நாளை முதல்...

அதன்படி கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 78 ஆயிரத்து 484 குடும்பங்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இது நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும். 

ஒரு நாளைக்கு 200 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் ரேஷன் கடையில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க பரிசு தொகுப்பு வழங்கப்படும் நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்ட டோக்கன் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. 

செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி

அதில் அவரவர் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு வர வேண்டும். பொங்கல் பரிசை பெற்றுக்கொண்டதும், சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் ரேஷன் கடைகளுக்கு சென்று பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால், கோவை மாவட்ட வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவலை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்து உள்ளார்.


Next Story