அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 3 Jan 2022 12:25 AM GMT (Updated: 3 Jan 2022 12:25 AM GMT)

அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

சென்னை,

ராம பக்த ஆஞ்சநேயர், மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்த நன்னாளில் ஆஞ்சநேயர் மற்றும் பெருமாள் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடந்து வருகிறது. அனுமனை வழிபட்டால் காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது ஐதீகம். அதன்படி அனுமன் ஜெயந்தியான நேற்று சென்னையில் உள்ள அசோக்நகர் ஆஞ்சநேயர் கோவில், ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அதிகாலையில் மூலவர், உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்ணெய் சாத்தி, வடை மாலை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ராமநாம பஜனையும் நடந்தது.

நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு செந்தூரம், துளசி, வடை, கற்கண்டு, பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம் போன்றவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதேபோன்று சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதேபோல் நங்கநல்லூரில் உள்ள 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் மகா திருமஞ்சனத்துடன் விழா தொடங்கியது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story