‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 3 Jan 2022 3:50 PM IST (Updated: 3 Jan 2022 3:50 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை படுமோசம்

சென்னை மந்தைவெளி மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் சாலைகள் மோசமாக இருக்கிறது. நாகேஸ்வரா பார்க் மற்றும் மயிலாப்பூர் சாய்பாபா கோவில் மற்றும் வி.சி. கார்டன் முதல் தெரு, செயிண்ட் மேரீஸ் ரோடு போன்ற இடங்களில் சாலைகளில் பள்ளங்கள் அதிகமாக இருக்கிறது. மந்தைவெளி மார்க்கெட்டில் ஒரு பெரிய பள்ளம் விழுந்து இருக்கிறது. இந்த சாலைகள் சீரமைக்கப்படுமா? 

- பாஷா, மந்தைவெளி. 

அச்சுறுத்தும் பள்ளம்

சென்னை மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலையில் சாய்பாபா கோவில் சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் பள்ளம் இருக்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகிறார்கள். இந்த பள்ளம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- எம். சிவாஜிபாபு, ஜல்லடியன்பேட்டை. 



மூடாத பள்ளத்தால் மக்கள் அவதி

சென்னை கொடுங்கையூர் டி.வி.கே. 2-வது லிங்க் சாலையில் ஒரு மாதத்துக்கு முன்பு நடைபாதை அமைக்கிறோம் என்ற பெயரில் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இந்த பள்ளம் சரிவர மூடப்படாமல் அப்படியே விட்டு சென்றிருக்கிறார்கள். இதனால் மின்வயர்கள் ஆங்காங்கே ஆபத்தான வகையில் நீட்டிக்கொண்டு இருக்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வரவே பயமாக இருக்கிறது. 

- சமூக ஆர்வலர்கள். 



எரியாத தெருவிளக்குகள்

சென்னை குன்றத்தூர் அருகே இருக்கும் மெட்ரோ கிராண்ட் சிட்டி குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரிவதே கிடையாது. இதனால் மாலை நேரத்தில் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். வெளியே செல்லக்கூட முடிவதில்லை. மக்கள் சிரமத்தை போக்கும் வகையில் எரியாமல் கிடக்கும் அந்த தெருவிளக்குகள் எரிய செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

சமூக ஆர்வலர்கள். 

சுகாதாரம் தேவை

சென்னை கோடம்பாக்கம் பவர்ஹவுஸ், எம்.ஜி.ஆர். நகர், சைதாப்பேட்டை பகுதிகளில் உள்ள அம்மா மினி கிளினிக் வளாகங்கள் சுகாதாரமின்றி காணப்படுகிறது. தரைகள் அசுத்தமாக காட்சி தருகின்றன. குடிநீர் வசதி இல்லை. மேலும் முக கவசங்கள், சானிடைசர் போன்ற அவசியமான பொருட்கள் இருப்பது கிடையாது. இதுகுறித்து கேட்டால் அங்குள்ள செவிலியர்கள் முறையாக பதில் அளிப்பது கிடையாது. எனவே மேற்கண்ட அம்மா மினி கிளினிக்குகள் சுகாதாரமாக வைக்கப்பட வேண்டும். 

- சமூக ஆர்வலர்கள். 

சாய்ந்து கிடக்கும் டிரான்ஸ்பார்மர்

சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு 9-வது மெயின் ரோட்டில் ஒரு டிரான்ஸ்பார்மர் இருக்கிறது. இந்த டிரான்ஸ்பார்மர் சாய்ந்த நிலையில் அபாயகரமாக காட்சி தருகிறது. இதன் அருகே செல்லவே பயமாக இருக்கிறது. எனவே தேவையில்லா அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்னர் இந்த டிரான்ஸ்பார்மர் சரிசெய்யப்படுமா? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

- எம்.ஜே.பிரபாகர், மடிப்பாக்கம். 



பாதாள சாக்கடை மூடி சேதம்

சென்னை தலைமை செயலகம் அருகேயுள்ள ராஜாஜி சாலையில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி பெயர்ந்த நிலையில் இருக்கிறது. செடி-கொடிகளை நிரப்பி அந்த பள்ளத்தை மூடியிருக்கிறார்கள். நடைபாதையில் செல்வோர் இந்த பள்ளத்தில் தவறி விழ வாய்ப்பிருக்கிறது. மழைக்காலங்களிலும் பாதிப்பு அதிகமுள்ளது. 

- பொதுமக்கள், சென்னை. 



ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

சென்னை வால்டாக்ஸ் சாலை ஜட்காபுரத்தில் (என்.எஸ்.சி. போஸ் சாலை எதிரில்) உள்ள மின் இணைப்பு பெட்டி கதவுகள் உடைந்த நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது. மின்வயர்கள் ஆபத்தான முறையில் நீட்டிக்கொண்டு இருக்கிறது. மின்வாரிய அதிகாரிகள் இந்த மின் இணைப்பு பெட்டியை சீரமைக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

- பொதுமக்கள், ஜட்காபுரம். 



சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள்

செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் காந்தி ரோட்டில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) அலுவலகத்தையொட்டிய பகுதியில் சாலையோரம் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் கோழி-இறைச்சி கழிவுகளும் அங்கே கொட்டப்படுகின்றன. அலுவலகத்தையொட்டிய நடைபாதையும் அசுத்தமாக இருக்கிறது. துர்நாற்றம் மிகுதியாக வீசுகிறது. 

- பொதுமக்கள், மேற்கு தாம்பரம். 

நாய்கள் தொல்லை

காஞ்சீபுரம் மாவட்டம் பாவாஜிநகர் வணிகர் தெருவில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் நடமாடவே அச்சம் கொள்கிறார்கள். குழந்தைகளை விரட்டி கடிக்க நாய்கள் பாய்கின்றன. இரவுப்பணி முடித்து வருவோர் பீதியடைகிறார்கள். நாய்கள் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

- சங்கரன், காஞ்சீபுரம். 


Next Story