காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் உரிமை கோரப்படாத 1,858 வாகனங்கள் நாளை ஏலம்

காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் உரிமை கோரப்படாத 1,858 வாகனங்கள் நாளை ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிமைகோரப்படாத வாகனங்கள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 1,858 வாகனங்களை ஏலம் விடப்படுவது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 போலீஸ் நிலையங்களில் உரிமைகோரப்படாத 1,817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் கார், லாரி உள்ளிட்ட 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,858 வாகனங்கள் உள்ளன.
இந்த நிலையில், வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து அவர்களிடம் வாகனங்களை ஒப்படைக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவிட்டார்.
ஏலம் விட முடிவு
ஆனால் வாகனங்களை உரிமைகோர எந்த உரிமையாளர்களும் வரவில்லை என்பதாலும், வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க இயலவில்லை என்பதாலும், தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் இருப்பில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், போலீஸ் நிலையங்களில் உள்ள உரிமை கோரப்படாத வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குனர் உத்தரவிட்டதின் பேரில், மேற்படி வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது.
மேலும், அதன்மூலம் வரும் தொகையினை அரசு கணக்கில் செலுத்த ஏதுவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், மேற்படி உரிமை கோரப்படாத 1,858 வாகனங்கள் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டும், இதுநாள்வரை மேற்படி வாகனங்கள் எவரும் உரிமை கோரவில்லை என தெரிகிறது.
தடுப்பூசி கட்டாயம்
இதையடுத்து நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் காஞ்சீபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டரால் அமைக்கப்பட்ட குழுவினரால் வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது.
இந்த ஏலத்தில் பங்குபெற இருப்போர் தவறாது கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழுடன் வர வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரியாக 12 சதவீதமும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீத வரிகளையும் உடனடியாக செலுத்திவிட வேண்டும். இந்த ஏலத்தில் பங்குபெறவிரும்புவோர் தவறாது தங்களது ஆதார் அட்டை அசல் உடன் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






