தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி செய்தி எதிரொலி:
மின்விளக்கு ஒளிர்ந்தது
கோவை மாநகராட்சி 99-வது வார்டு கோணவாய்க்கால்பாளையம் காளியம்மன் கோவில் தெருவில், மின்விளக்கு கடந்த சில நாட்களாக ஒளிரவில்லை. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின்விளக்கின் பழுதை சரிசெய்தனர். இதனால் அந்த மின்விளக்கு ஒளிர்ந்து வருகிறது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
ராஜா, கோணவாய்க்கால்பாளையம்.
பயணிகளுக்கு இடையூறு
பொள்ளாச்சி பழைய பஸ்நிலையத்தில் இருந்து கோவைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு பஸ்கள் நிறுத்தும் இடத்தில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், சில நேரத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
கண்ணன், பொள்ளாச்சி.
நிழற்குடையின் அவலநிலை
சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் காத்திருக்க நிழற்குடை உள்ளது. ஆனால் இந்த நிழற்குடையை ஓட்டலாக சிலர் மாற்றிவிட்டனர். இரவு நேரத்தில் இங்கு அமர்ந்து சாப்பிட்டுவிட்டு இலையை அங்கேயே போட்டுவிட்டு செல்கிறார்கள். சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்துவிட்டு செல்வதால், இந்த நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியவில்லை. எனவே இந்த நிழற்குடையின் அவலநிலையை மாற்றி, பயணிகளுக்கு பயன்படும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
மணி, காமநாயக்கன்பாளையம்.
பழுதான சாலை
கோவை 90 -வது வார்டு பகுதியில் அறிவொளி நகர் செல்லும் சாலை மிகவும் பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் பள்ளி வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு பழுதான இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன், கோவைப்புதூர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை சாய்பாபாகாலனி சின்னம்மாள் வீதியில் உள்ள சிறிய கடைகளில் சாப்பிடுபவர்கள் அதன் இலையை அங்கேயே போட்டுவிட்டு செல்கிறார் கள். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடப்பதால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் நிலை நீடித்து வருவதால், குவிந்து கிடக்கும் இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
கண்ணன், சாய்பாபாகாலனி.
அடிப்படை வசதிகள்
கோவை மாநகராட்சி 43-வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடாபுரம் பகுதியில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் தண்ணீர் வசதி தகனமேடை, மின்விளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களை தகனம் செய்ய செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த மயானத்தை சுற்றிலும் சுற்றுச் சுவர் அமைத்து தருவதோடு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
கந்தசாமி, வெங்கடாபுரம்.
பஸ் இயக்கப்படுமா?
கூடலூரில் இருந்து கேரள மாநிலம் கல்பட்டாவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் கூடலூர் பகுதி மக்கள் பெரும் பயனடைந்து வந்தனர். பின்னர் ஊரடங்கு காரணமாக கூடலூர்- கல்பட்டா இடையே பஸ் இயக்கப்படவில்லை. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். தற்போது தமிழகம்- கேரளா இடையே பஸ் போக்கு வரத்து நடைபெற்று வருவதால் கல்பட்டாவுக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜாதிர், கல்பட்டா.
சாய்து கிடக்கும் மரம்
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் காமாட்சி அம்மன் கோவில் வடக்கு வீதியில் மழை காரணமாக மரம் வேரோடு சாய்ந்தது. ஆனால் அந்த மரம் இதுவரை அப்புறப்படுத்தப்படவில்லை. இது சாலை ஓரத்தில் கிடப்பதால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டாலும் அதை சரிசெய்ய முடியவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
சந்திரன், ராமநாதபுரம்.
இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
கோவை அருகே உள்ள இடிகரை லட்சுமி நகர் செல்லும் சாலையின் ஓரத்தில் குடியிருப்பு அருகிலேயே இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பதுடன், அவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.
மகாராஜா, இடிகரை.
Related Tags :
Next Story