மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பாதியில் நிறுத்தம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பாதியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Jan 2022 9:53 PM IST (Updated: 3 Jan 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

கோவை

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். மேலும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கொடுத்த மனுக்களை வாங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இந்த கூட்டம், வழக்கமாக மதியம் 2 மணி வரை நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நேற்று 12 மணிக்கே நிறுத்தப்பட்டது. இதனால் அதன்பிறகு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக வாயிலில் வைத்திருந்த பெட்டியில் தங்களது மனுக்களை போட்டு சென்றனர்.

ஜல்லிக்கட்டு டோக்கன்

அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்த மனுவில், மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பஞ்சமி நிலம் யாருக்கும் பயன்படாமல் உள்ளது. இதை கணக்கெடுத்து அங்குள்ள 128 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் அளித்த மனுவில், கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனைவருக்கும் டோக்கன் வழங்காமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. மேலும் இங்குள்ள டோக்கன், பிற மாவட்டங்களிலும் வினியோகிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஜல்லிக்கட்டு நடைபெறும் பொதுஇடத்தில் டோக்கன் வினியோகிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

உடற்பயிற்சி கூடம்

சுவாமி விவேகானந்தர் உடற்பயிற்சி சாலை மற்றும் நூலக அமைப்பினர் கொடுத்த மனுவில், மாநகராட்சிக்கு சொந்தமாக ஒத்தச்செக்கார வீதியில் செயல்பட்டு வரும் உடற்பயிற்சி கூடத்தை அகற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

இதை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இடிகரை பகுதி மக்கள் அளித்த மனுவில், இடிகரை பேரூராட்சி 6-வது வார்டு மவுண்டன் வியூ பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி குட்டை போல காணப்படுகிறது. மேலும் பாரதி நகரில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. 

பொது வழித்தடம்

காந்திபுரம் 7-வது வீதி வழியாக மணியகாரன்பாளையத்திற்கு செல்லும் பொது வழித்தடத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடக்கோரி அந்த பகுதி மக்கள் மனு அளித்தனர்.
மேலும் இடிகரை பேரூராட்சியில் ஒரு வார்டில் வசிக்கும் சிலருக்கு, மற்றொரு வார்டில் ஓட்டு உள்ளது. இதை மறுவரையறை செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.


Next Story