யானைகள் உயிரிழப்பதை தடுக்க ரூ.3 கோடியில் திட்ட பணிகள்


யானைகள் உயிரிழப்பதை தடுக்க ரூ.3 கோடியில் திட்ட பணிகள்
x
தினத்தந்தி 3 Jan 2022 9:54 PM IST (Updated: 3 Jan 2022 9:54 PM IST)
t-max-icont-min-icon

கோவையில், ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க ரூ.3 கோடியில் திட்ட பணிகள் நடைபெற உள்ளதாக மண்டல வன பாதுகாப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம் தெரிவித்தார்.

கோவை

கோவையில், ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க ரூ.3 கோடியில் திட்ட பணிகள் நடைபெற உள்ளதாக மண்டல வன பாதுகாப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம் தெரிவித்தார்.

காட்டுயானைகள் உயிரிழப்பு

கோவை-பாலக்காடு இடையே ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் காட்டுயானைகள் எதிர்பாராதவிதமாக ரெயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மதுக்கரை அருகே ரெயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தன.

இத்துடன் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 22 யானைகள் உயிரிழந்து உள்ளன. இதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கோவை மண்டல தலைமை வன பாதுகாப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-

என்ஜின் டிரைவர்களுக்கு வலியுறுத்தல்

போத்தனூர்-பாலக்காடு இடையே 1861-ம் ஆண்டு ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இது ‘ஏ’ லைன் என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்று பாலக்காடு-போத்தனூர் இடையே 1974-ம் ஆண்டு ‘பி’ லைன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரெயில் பாதைகளை யானைகள் அடிக்கடி கடந்து செல்கின்றன. 

பெரும்பாலும் இரவு நேரத்தில் கடக்கின்றன. இதை கருத்தில் கொண்டு அந்த வழியாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 45 கிலோ மீட்டர் வேகத்திலும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 65 கிலோ மீட்டர் வேகத்திலும் ரெயில்களை இயக்க வேண்டும் என்று என்ஜின் டிரைவர்களுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.

புதிய திட்டம்

ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க ரூ.3 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்த வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ‘ஏ’ மற்றும் ‘பி’ ரெயில் பாதைகளில் இரவிலும் பதிவு செய்யக்கூடிய கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. ‘பி’ லைன் ரெயில் பாதையில் 4 கேமராக்களும், ‘ஏ’ லைன் ரெயில் பாதையில் 2 கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன.

சூரிய மின்வேலி

‘டிரோன்’ கேமராக்களை பறக்கவிட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணிப்பது, 20 கண்காணிப்பு ஊழியர்கள் ரெயில்வே தண்டவாள பகுதியில் ரோந்து சென்று பார்வையிடுவது, ரெயில்களின் வேகத்தை கண்டறிய ரூ.10 லட்சத்தில் ‘ஸ்பீட் கன்’ கருவியை பொருத்துவது, அடிக்கடி யானைகள் கடக்கும் பகுதியில் சூரிய மின்வேலி அமைப்பது உள்பட ரு.3 கோடியில் திட்ட பணிகளுக்கான வரைவுகள் தயாரிக்கப்பட்டு அரசின் நிதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நிதி உதவி கிடைத்ததும் அந்த பணிகள் தொடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story