டிராக்டர் டிப்பர் சக்கரத்தில் சிக்கி டிரைவர் உள்பட 2 பேர் பலி
தஞ்சை அருகே விறகு ஏற்ற டிராக்டரில் சென்றபோது டிராக்டரில் இருந்து டிரைவர் உள்பட 2 பேர் தவறி விழுந்து டிப்பர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வல்லம்:
தஞ்சை அருகே விறகு ஏற்ற டிராக்டரில் சென்றபோது டிராக்டரில் இருந்து டிரைவர் உள்பட 2 பேர் தவறி விழுந்து டிப்பர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
டிராக்டரில் வந்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வந்தான்விடுதி புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன் ராமராஜன்(வயது 23). அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ்(25).
நேற்று முன்தினம் இரவு ராஜேஷ், ராமராஜன் ஆகிய இருவரும் டிப்பர் பொருத்தப்பட்டிருந்த டிராக்டரில் விறகு ஏற்றிச் செல்வதற்காக கறம்பக்குடியில் இருந்து தஞ்சையை அடுத்த மருங்குளம் அருகே கோபால் நகர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். டிராக்டரை ராஜேஷ் ஓட்டி வந்தார். டிராக்டரின் முன்பகுதியில் ராஜேஷ் அருகே ராமராஜன் அமர்ந்து இருந்தார்.
பரிதாப சாவு
மருங்குளம் அருகே கோபால்நகர் பகுதியில் டிராக்டர் வந்து ெகாண்டிருந்தபோது திடீரென சாலையின் நடுவே இருந்த பள்ளத்தில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது.
அப்போது டிராக்டரின் முன்பகுதியில் அமர்ந்து இருந்த ராஜேஷ், ராமராஜன் ஆகிய இருவரும் டிராக்டரில் இருந்து முன்புறமாக தூக்கி வீசப்பட்டு டிப்பரின் சக்கரத்தில் சிக்கினர். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரேத பரிசோதனை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் பலியான ராஜேஷ், ராமராஜன் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டிராக்டர் டிப்பர் சக்கரத்தில் வாலிபர்கள் சிக்கி உயிரிழந்த காட்சி அருகே உள்ள கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிராக்டர் டிப்பர் சக்கரத்தில் சிக்கி டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story