திருமண, சுபநிகழ்ச்சி விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி கமிஷனர்


திருமண, சுபநிகழ்ச்சி விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி கமிஷனர்
x
தினத்தந்தி 6 Jan 2022 2:07 PM IST (Updated: 6 Jan 2022 2:07 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஓட்டல்கள், மண்டபங்கள், சமூக நலக்கூடங்களில் நடைபெறும் திருமண, சுபநிகழ்ச்சி விவரங்களை மாநகராட்சிக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.

100 நபர்கள் மட்டும் அனுமதி

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஓட்டல்கள், விருந்து அரங்கங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது. அப்போது கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

திருமணம் விவரங்கள்

மேலும், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள் மற்றும் சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதள பக்கத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடம் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி திரவம் வைத்து அனைவரின் கைகளை சுத்தம் செய்து அனுமதிக்க வேண்டும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.

கடுமையான நடவடிக்கை

மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் விவரங்களை கொண்டு வருவாய் துறையை சார்ந்த அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளுதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என கள ஆய்வு செய்யப்படுவார்கள்.

மாநகராட்சியின் வருவாய் துறை அலுவலர்களின் கள ஆய்வின்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை எனில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்களின் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு உடனுக்குடன் அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா பரிசோதனை

இந்த நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, கூடுதல் போலீஸ் கமிஷனர் டி.செந்தில்குமார், மாநகராட்சி துணை கமிஷனர் விஷூமஹாஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் காய்ச்சல், சளி அறிகுறி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அந்தவகையில் 15 மண்டலங்களில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Next Story